கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நமக்குநாமே! நடைபயணம் சென்ற ஸ்டாலின் கோயமுத்தூரைக் கடக்கையில் ‘தி.மு.க.வில் இருப்பவர்களில் 90% பேர் இந்துக்கள்.’ என்று ஒரு புது பிட்டை போட்டார். ’சிறுபான்மையினரின் காவலன், தோழனான தி.மு.க.வின் தளபதிக்கு இந்துக்களைப் பற்றி ஏன் கவலை?’ என்று கேள்வி எழுந்தபோது கூடவே ‘ஓஹோ இது தேர்தல் நேரமாச்சே, அதான் இப்படி பேசுறார்!’ என்று பதிலும் கிடைத்தது. 

தேர்தல் வேளைகளில் இந்துக்களுக்கு எதிரான விமர்சனங்களை கொட்டாமல் அடக்கி வாசித்த ஸ்டாலின் அதன் பிறகு வழக்கம்போல் ஆரம்பித்தார்.  சில வாரங்களுக்கு முன் கூட இந்துக்களின் திருமணங்களில் ஓதப்படும் மந்திரங்களுக்கான அர்த்தம் அந்த புரோஹிதருக்கு கூட தெரியாது! என்று இஸ்லாமிய திருமண மேடையில் நின்று கொக்கரித்தார். இதற்காக தாறுமாறாக வாங்கியும் கட்டினார் விமர்சனத்தை. இப்பேர்ப்பட்ட ஸ்டாலின், தேர்தலை நோக்கிய தன் அரசியல் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் நல்ல நாள், நல்ல நேரம், அஷ்டமி நவமி, சூலம், சந்திராஷ்டமம், மேல் நோக்கு கீழ்நோக்கு நாள், அமாவாசை பெளர்ணமி ஆகியவற்றை பார்த்தே செய்கிறார்! என்று அவரது கட்சிக்குள்ளிருந்தே தகவல்கள் வெடிக்கின்றன. 

அதிலும் குறிப்பாக கடந்த 6-ம் தேதியன்று விருதுநகரில் தென்மண்டல மாநாடு நடத்தியதன் பின்னணியில் கூட பலமான ஜோதிட  சென்டிமெண்டுகள் உள்ளன! என்று காதைக் கடிக்கின்றனர் அக்கட்சி நிர்வாகிகள். அது உண்மைதானா? என்று நாம் விசாரித்தபோது வந்து விழுந்த தகவல்கள்...“உண்மைதான் விருதுநகர் மாநாட்டை நல்ல நாள் பார்த்துதான் தளபதி நடத்தினார். முதலில் மார்ச் 3-ம் நாள் இந்த மாநாட்டை நடத்திட முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஜோதிடம் பார்க்கையில், மார்ச் 6-ம் தேதியன்று அமாவாசை என்பதால் அதற்கு மாற்றினார்கள்.

  

ஏன் இந்த மாற்றம்? மூணுன்னு முடிவு பண்ணிட்டோம்ல? என்று தென்மண்டல இரண்டாம் கட்ட நிர்வாகிகள் கேட்டபோது மேலிருந்து, ‘அமைதியா வேலையை மட்டுமே பாருங்க.’ என்று அரட்டல் பதில் வந்தது. பிறகுதான் மெதுவாக இந்த ரகசியம் கசிஞ்சது. தலைவர் காலத்திலிருந்தே பகுத்தறிவில் ஊறிப்போன சீனியர் நிர்வாகி ஒருத்தர் ‘என்னய்யா இந்த தலைவர் இப்படி அமாவாசைக்கு அலையுறார்?’ன்னு ஓப்பனாகவே கோபப்பட்டுட்டார். தமிழகத்தில் வளமும், செழிப்பும் உள்ள மாவட்டங்கள் எத்தனையோ இருக்க, வெயில் வெளுக்கும் விருதுநகரில் மாநாடு நடத்தியதிலும் ஒரு சென்டிமெண்ட் இருக்கிறது. 

அதாவது, 2004-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸும், தமிழகத்தில் அ.தி.மு.க.வும் ஆண்டு கொண்டிருந்தன. அப்போது நாடாளுமன்ற தேர்தல் வந்தபோது விருதுநகரில் தென்மண்டல மாநாட்டை எங்கள் கட்சி நடத்தியது. அந்த தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் அமோகமாக வென்றோம். டெல்லியில் அமைந்த காங்கிரஸ் அமைச்சரவையில் நாங்களும் பங்கேற்றோம். கட்சி மிகவும் கெத்தாக வலம் வந்தது. 

அந்த சென்டிமெண்ட் மீண்டும் நிகழும் வண்ணம், இந்த முறையும் மாநாட்டை விருதுநகரில் நடத்தியிருக்கிறார் ஸ்டாலின். சென்னையில் மோடி தலைமையில் அ.தி.மு.க. - பி.ஜே.பி.யின் கூட்டணி பிரசாரம் நடந்து கொண்டிருந்த அதேநாளில்தான் தளபதியும் தன் மாநாட்டை விருதுநகரில் துவக்கினார். இந்த மாநாட்டைதான் எங்கள் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் பிரசார துவக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வாய்மொழியாகவும் சென்டிமெண்ட்  உத்தரவை நிர்வாகிகளுக்கு வழங்கியுள்ளனர் தலைமை கழக நிர்வாகிகள். தேர்தல் முடியும் வரை இன்னும் எதில் எதிலெல்லாம்  சென்டிமெண்ட் பார்த்து அரசியல் பண்ணப்போகுதோ தலைமை! ஒண்ணும் புரியலை. வெளியிலதான் நாங்க பகுத்தறிவு, உள்ளே அமாவாசை பெளர்ணமி அறிவுதான்.” என்கிறார்கள் நக்கல் கலந்த வெறுப்பில். இதெல்லாம் நெசந்தானா ஸ்டாலின் சார்!?.............