அமமுகவில் இருந்து விலகி திமுகவில் காலையில் இணைந்த திருப்பரங்குன்றம் முக்கியப்புள்ளிக்கு அன்று மாலையே முக்கிய பொறுப்பை கொடுத்து அசரடித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

 

அமமுகவில் டி.டி.வி.தினகரனுக்கு வலதுகரமாக இருந்த செந்தில் பாலாஜியை தட்டித்தூக்கியது திமுக. கட்சியில் இருந்த ஒரே மாதத்தில் மாவட்டச் செயலாளர் பொறுப்பையும் கொடுத்து அசரடித்தது திமுக. அதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி மேற்கு மாவட்டங்களில் கெத்து காட்டி வருகிறார்.  மேலும் பல அமமுக நிர்வாகிகளுக்கு வலைவிரித்து வருகிறது திமுக. இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியை பல பகுதிகளாக பிரித்து புதிய நிர்வாகிகளை திமுக நியமித்துள்ளது. அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த நாளிலேயே ஒன்றியப் பொறுப்பாளர் பதவி வழங்கியது கட்சியினரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதனிடையே சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பு ஒன்றில் திமுக 3-ம் இடத்தில் இருப்பதாக தகவல் வெளியானது. இதனால், அதிர்ச்சியடைந்த கட்சித் தலைமை, தொகுதியை திமுகவுக்குச் சாதகமாக மாற்றும் முயற்சியை மேற்கொள்ளும்படி கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, தெற்கு மாவட்ட மாவட்டச் செயலாளர் எம்.மணிமாறன், வடக்கு மாவட்ட செயலாளர் எம்.மூர்த்தி ஆகியோருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து அமமுக திருப்பரங்குன்றம் ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலாளராக இருந்த வி.வேட்டையன் உள்ளிட்ட சிலரை திமுகவில் இணைய வைத்தனர். கடந்த பிப்.7-ம் தேதி காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் வேட்டையன். அன்று மாலையிலேயே, அவருக்கு திருப்பரங்குன்றம் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது.

அமமுகவை ஸ்டாலின் அலற விட்டாலும் திமுக நிர்வாகிகள் திகிலில் இருக்கின்றனர். இது குறித்து திமுக நிர்வாகிகள் கூறுகையில், ’’ஆண்டுக்கணக்கில் காத்திருப்போருக்கெல்லாம் பதவி கிடைக்காத நிலையில், ஒரே நாளில் முக்கியப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் கட்சிப் பொறுப்பு வழங்கும் அளவுக்கு கட்சி வேகமாக இயங்குவது உண்மை எனில், இதேபோல் காலியாக உள்ள பதவிகளை, வேகமாகச் செயல்படும் நிர்வாகிகளைக்கொண்டு உடனே நிரப்ப வேண்டும். இப்படியே போனால் காலம் காலமாக திமுகவில் இருப்பவர்களின் நிலை என்னவாகும். திமுகவில் பலரும் அதிருப்தியில் இருக்கின்றனர்’’ என வேதனை தெரிவிக்கின்றனர்.