திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது நெருங்கிய நண்பர் அன்பில் பொய்யாமொழியின் 20-ம் ஆண்டு நினைவு நாளில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளார். அப்போது தனது உயிர் நண்பனை நினைத்து கண்கலங்கியுள்ளார்.

திமுகவின் எல்லாமுமாக இன்றைக்கு விளங்கும் மு.க.ஸ்டாலினுக்கு சற்றேரக்குறைய 40 வருஷ காலம் உயிர் நண்பனாக, ஆலோசகனாக, எல்லாமுமாக விளங்கிய மறைந்த அன்பில் பொய்யாமொழி.

ஸ்டாலின் குடும்பத்துக்கும், அன்பில் பொய்யாமொழி குடும்பத்துக்கும் இருந்த நட்பு உலகுக்கே தெரியும். இது தலைமுறைகளை கடந்த நட்பு.  முன்பு கருணாநிதியும், அன்பில் தர்மலிங்கமும் நட்புடன் பழகிவந்தனர். அந்த நட்பு அவர்கள் மகன்களான ஸ்டாலின் - அன்பில் பொய்யாமொழியிடமும் தொடர்ந்தது.  இப்போது தலைமுறைகளை தாண்டி இளைய தலைமுறையான உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரை தொடர்கிறது.

தற்போது, உதயநிதியின் அரசியல் பயணத்திலும் இவர் முக்கிய பங்கையாற்ற உள்ளார். திமுகவின் மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளரான அன்பில் மகேஷ் உதயநிதி இளைஞர் அணி செயலராக பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்தே பக்க பலமாக இருந்து வருகிறார்.     

என்னதான் கருணாநிதியின் நண்பன் மகனாக இருந்தாலும், கட்சியின் உயர்மட்ட பதிவுகளுக்கு ஆசைப்படாதஹ்வாராக இருந்துவந்த பொய்யாமொழி பெரும்போக்காக நடந்துகொண்டு இறுதிவரை கட்சியிலுள்ள அடிமட்ட தொண்டன் வரை அனைவரையும் அனுசரித்து சென்றவர். இன்று அவரின் நினைவுநாளையொட்டி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சேலத்தில் இருந்து சென்னை திரும்பாமல் திருச்சிக்கு நேற்றிரவே சென்றுவிட்ட ஸ்டாலின், தனது நண்பன் அன்பில் பொய்யாமொழியின் 20-ம் ஆண்டு நினைவு நாளில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளார். அப்போது கண்கலங்கியுள்ளார்.

திமுக இளைஞரணி துணைச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை தி.நகரில் வசித்தாலும், தனது தந்தையின் நினைவுநாள், பிறந்தநாள் நிகழ்ச்சிகளை அவர் வாழ்ந்து மறைந்த கிராப்பட்டியில் உள்ள கிராமத்து வீட்டில் தான் நடத்தி வருகிறார். தந்தையின் நண்பர்கள், கட்சிக்காரர்கள், அங்காளி பங்காளிகள் என அனைவரையும் அழைத்து மதிய விருந்தும் அளித்து உபசரித்துள்ளார்.