மு.க.அழகிரி பயத்தால் மதுரையை கூட்டணிக்கட்சிக்கு ஒதுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதால் உடன்பிறப்புகள் அதிர்ச்சிடைந்துள்ளனர். 

மக்களவை தேர்தலில் திமுக தங்களது வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனாலும் மதுரை தொகுதியில் நிச்சயம் திமுக போட்டியிடும் என உடன்பிறப்புகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். 

இந்நிலையில், தற்போதைய மக்களவைத் தேர்தலில் அழகிரி தயவின்றி மதுரையில் திமுக வெற்றிபெற வேண்டும் என விரும்புகிறார் மு.க.ஸ்டாலின்.  மக்களவைத் தேர்தலில் போட்டியிட திமுக மாநகர் பொறுப்புக்குழு உறுப்பினர் வேலுச்சாமி, மாநகர் பொறுப்புக்குழு தலைவர் தளபதி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, டாக்டர் சரவணன், செ.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் சீட் கேட்டு விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால், மு.க.அழகிரி கடைசி நேரத்தில் இடையூறு செய்வார் என்கிற நெருடலில் மு.க.ஸ்டாலின் இருப்பதால் மதுரையை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்க உள்ளதாக திமுக நிர்வாகிகள் கூறுகின்றனர். 

ஆகையால் மதுரையை மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்க முன்வந்துள்ளது திமுக. இதுகுறித்து திமுகவினர் கூறுகையில், மதுரையில் களமிறங்கினால் திமுக வெற்றி பெறும். மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.