Asianet News TamilAsianet News Tamil

இங்க ஊரே தண்ணிக்கு தவிக்குது...பசங்க சாவுது, நீங்க சொந்தப் பஞ்சாயத்து பேச டெல்லிக்கு போவீங்க? அப்படி தான? கொல காண்டில் கேள்வி கேட்கும் ஸ்டாலின்

தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்து, “என் பதவியை மட்டும் எப்படியாவது காப்பாற்றுங்கள்” என்று கெஞ்சி, மடிப்பிச்சை ஏந்தி  -மன்றாடி விட்டுத் திரும்பியுள்ள முதலமைச்சர் பழனிச்சாமியை தமிழக மக்கள் ஒரு போதும் மன்னிக்கவும் மாட்டார்கள். வரலாறும் மன்னிக்காது! என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

MK Stalin Statement for edappadi palanisay
Author
Chennai, First Published Jun 16, 2019, 2:36 PM IST

தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்து, “என் பதவியை மட்டும் எப்படியாவது காப்பாற்றுங்கள்” என்று கெஞ்சி, மடிப்பிச்சை ஏந்தி  -மன்றாடி விட்டுத் திரும்பியுள்ள முதலமைச்சர் பழனிச்சாமியை தமிழக மக்கள் ஒரு போதும் மன்னிக்கவும் மாட்டார்கள். வரலாறும் மன்னிக்காது! என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகமெங்கும் மக்கள் தவிக்கும் வாய்க்குத் தண்ணீர் கிடைக்காமல் அலைபாய்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் தலைநகர் டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமி தமிழக மக்களுக்கு எந்த விதமான ஆக்கபூர்வமான திட்டங்களையும் கேட்டுப் பெற முடியாமல், தனது கட்சியின் சொந்தப் பஞ்சாயத்து மட்டும் பேசிவிட்டு திரும்பியிருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர்  நரேந்திரமோடியிடம் முதலமைச்சர் கொடுத்த மனுவில் இடம்பெற்றுள்ள 29 கோரிக்கைகள் “புதிய மொந்தையில் பழைய கள்” அடைக்கப்பட்டுள்ளதைத்தான் நினைவூட்டுகிறது. ஆட்சி பொறுப்பேற்ற மூன்று வருடங்களாக பிரதமரை சந்திக்கும் போது கொடுக்கும் அதே மனுவைத்தான் இந்த முறையும் சற்று “வெட்டி, ஒட்டி” திரும்ப அளித்திருக்கிறார்.  

MK Stalin Statement for edappadi palanisay

உள்ளாட்சி நிதி, பட்டியலின மாணவர்களுக்கான மெட்ரிக்குலேசன் ஸ்காலர்ஷிப், மாநிலத்தில் செயல்படுத்தியுள்ள மத்திய அரசு திட்டங்களுக்கான நிதி, ஜி.எஸ்.டியால் ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகை என சுமார் 17350 கோடி ரூபாய் நிதியை தமிழகத்திற்கு வழங்காமல் மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து- தமிழக மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு வெளிவந்துள்ள நீட் தேர்வு முடிவுகளால் தமிழ்நாட்டில் திருப்பூர் ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டை வைஸ்யா, விழுப்புரம் மோனிசா என அடுத்தடுத்து மூன்று மாணவிகள் தற்கொலை செய்துள்ளார்கள்.

இன்றைய தினம் முதலமைச்சரின் சொந்த மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அருகில் பாரதப்பிரியன் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள அதிர்ச்சிச் செய்தி வந்துள்ளது. “மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை” என்று டெல்லியில் முகாமிட்டிருந்த கர்நாடக முதலமைச்சர் ஆணவமாக பேட்டியைக் கொடுத்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே எள்ளி நகையாடியிருப்பது தமிழக விவசாயிகளுக்கு பேரதிர்ச்சியைத் தந்திருக்கிறது.

MK Stalin Statement for edappadi palanisay

ஆனால் முதலமைச்சர் கொடுத்த மனு “அலட்சியங்களின்” ஒட்டு மொத்த “அலங்காரமாக” இருக்கிறது. “தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கும் உடனடியாக குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற்றுத்தாருங்கள்” என பிரதமர்   நரேந்திரமோடியை வலியுறுத்தும் வரிகளை மனுவில் சேர்க்காததது வேதனையளிக்கிறது. மாணவ மாணவிகளின் தற்கொலைகளைப் பார்த்து விட்டு டெல்லி சென்ற ஒரு முதலமைச்சர் நீட் தேர்வு மசோதாக்கள் குறித்து இப்படியொரு கடிதத்தை தயார் செய்து கொடுத்திருப்பது மாணவ- மாணவிகளின் நலனில் அக்கறை இல்லை என்பதைக் காட்டுகிறது.

MK Stalin Statement for edappadi palanisay

மேகதாது அணை கட்டுவது குறித்து கர்நாடக முதலமைச்சர் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக- கூட்டாட்சித் தத்துவத்திற்கு உலை வைக்கும் விதத்தில் பேசிய பிறகும்,  நிதி அயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் பழனிச்சாமி அதை ஒரு வார்த்தை கூட கண்டிக்கவில்லை. கேரள, புதுவை முதலமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து - அக்கூட்டத்திலேயே இணைந்து ஒரு எதிர்ப்பைத் தெரிவிக்கவும் இல்லை. “தமிழகத்தின் கருத்தைக் கேட்காமல் மேகதாது அணை கட்ட அனுமதிக்கக்கூடாது” என்று ஆணித்தரமாக பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் எதிர்த்து தமிழக விவசாயிகளின் நலனை எடப்பாடி  பழனிச்சாமி காக்கத் தவறியது ஏன்? மாநிலத்தில் நிதி பற்றாக்குறை தலைவிரித்தாடுகிற சூழலில் கூட, “17 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு நிதி இருக்கிறது” என்பது குறித்து நிதி அயோக் கூட்டத்தில் வெளிப்படுத்தி- தமிழ்நாட்டை மத்திய பா.ஜ.க. அரசு  எப்படி வஞ்சிக்கிறது என்பதை அனைத்து மாநில முதல்வர்கள் மத்தியிலும் சுட்டிக்காட்டும் வாய்ப்பை தவற விட்டுள்ளார்  பழனிச்சாமி.

MK Stalin Statement for edappadi palanisay

ஆகவே தலைநகர் டெல்லியில் தமிழக உரிமைகளை தாரை வார்த்துக் கொடுத்து விட்டு - வெறுங்கையுடன் திரும்பியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமி - தமிழக மக்களின் உணர்வுகளை, தமிழ்நாடு சட்டமன்றத்தின் உணர்வுகளை நிதி அயோக் கூட்டத்தில் முறைப்படியும், முனைப்புடனும் எதிரொலிக்கவுமில்லை. நீட் தேர்வு, மேகதாது அணை, மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ள மாநில நிதி அத்தனைக்கும் தீர்வு காண வாய்ப்புக் கிடைத்தும் கோட்டை விட்டுள்ளார். தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்து, “என் பதவியை மட்டும் எப்படியாவது காப்பாற்றுங்கள்” என்று கெஞ்சி, மடிப்பிச்சை ஏந்தி  -மன்றாடி விட்டுத் திரும்பியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக மக்கள் ஒரு போதும் மன்னிக்கவும் மாட்டார்கள். வரலாறும் மன்னிக்காது!  எனக் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios