பொள்ளாச்சியில் 250 இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதை புகைப்படம் எடுத்து அவர்களிடமே போட்டுக்காட்டி அதை வைத்து மிரட்டி பணம் பறித்த கொடுமைகள் எல்லாம் இந்த ஆட்சியில் தான் நடந்துள்ளது. அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என வேதனையாக கூறியுள்ளார்.

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேற்று மாலையில் நாங்குநேரி, பரப்பாடி, இட்டமொழி, வடக்கு விஜயநாராயணம், முனைஞ்சிப்பட்டி, மூலைக் கரைப்பட்டி ஆகிய இடங்களுக்கு திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தார்.

பிரசாரத்தின் போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது; நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரூபி மனோகரன் நிறுத்தப்பட்டு உள்ளார். அவருக்கு வாக்கு கேட்டு இங்கு வந்துள்ளேன். வருகிற 21-ந்தேதி நடக்கும் இடைத்தேர்தலில் கை சின்னத்தில் வாக்களித்து காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். நீங்கள் நிச்சயமாக செய்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் அதை அப்படி சொல்லக்கூடாது. ஏன் என்றால் எம்.ஜிஆர்., ஜெயலலிதா தலைமையில் நடந்தது தான் அ.தி.மு.க. அரசு.

தற்போது மத்தியில் ஆளும் பிஜேபியின் பினாமி அரசாக எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படுகிறது. தற்போது சட்டசபையில் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் 5 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் தான் வித்தியாசம் உள்ளது. ஆளும் கட்சியை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்களுமே ஆட்சியை கலைக்க தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த எம்.எல்.ஏ.க்களை தக்க வைப்பதற்காகவே இந்த அரசு குறியாக செயல்பட்டு வருகிறது.

முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், உள்ளாட்சி துறை அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட பல அமைச்சர்கள் மீது ஊழல் புகார் இருக்கிறது. சி.பி.ஐ. விசாரணை நடத்தும் அளவுக்கு அவர்கள் மீது ஊழல் புகார்கள் உள்ளது. இந்த ஆட்சி கலைந்த அடுத்த நிமிடமே அவர்கள் எல்லாம் சிறைக்கு போக வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் தான் அவர்கள் ஆட்சியை தக்க வைக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

தற்போது தமிழ்நாட்டில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. குடிசை தொழில்கள் நசுக்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலைகளும், சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலைகளும் மூடப்பட்டதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். தமிழக அரசால் நடத்தப்படும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் கூட வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளாக சட்டம்ஒழுங்கு சீரழிந்து உள்ளது. பல இடங்களில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சம்பவம் நடந்து வருகிறது. சென்னையில் அ.தி.மு.க.வினர் வைத்த பேனர் சரிந்து விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் பலியானார். அவரது வீட்டிற்கு நேரில் சென்று நான் ஆறுதல் கூறினேன். ஆனால் ஆளுங்கட்சியினர் யாராவது சென்று ஆறுதல் கூறினார்களா?. இல்லை. அவர்கள் ஆறுதல் கூறாதது வேதனை அளிக்கிறது.

தி.மு.க.வை பொறுத்தவரையில் தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து மக்களை சந்திப்பது இல்லை. எந்த நேரத்திலும் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறோம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களை சந்திக்கின்ற கட்சி தி.மு.க. தான். மக்களின் குறைகளை கேட்கின்ற கட்சியும் தி.மு.க. தான். மக்கள் மீது அக்கறை இல்லாத அ.தி.மு.க.வுக்கு நீங்கள் இந்த இடைத்தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். அதற்கு இந்த தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.

நெல்லை, விருதுநகரில் முக்கிய தொழிலாக இருப்பது பட்டாசு தொழிற்சாலை தான். தற்போது 5 லட்சம் பேர் வேலை இழந்து தவித்து வருகின்றனர். திருப்பூரில் லட்சக்கணக்கானோர் வேலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறார்கள். 21-ந் தேதி நடைபெறக்கூடிய தேர்தல் என்பது இந்த ஆட்சிக்கு ஒரு புத்தி புகட்ட கூடிய பாடம் வழங்கக் கூடிய ஒரு தேர்தலாக இது அமைய வேண்டும். பெண்கள் சுதந்திரமாக நாட்டில் நடமாட முடிகிறதா? பெண்களிடம் செயின் பறிப்பு, பாலியல் பலாத்காரம் போன்ற பல செய்திகள் தினம் தினம் வந்து கொண்டிருக்கின்றன.

பொள்ளாச்சியில் 250 இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதை புகைப்படம் எடுத்து அவர்களிடமே போட்டுக்காட்டி அதை வைத்து மிரட்டி பணம் பறித்த கொடுமைகள் எல்லாம் இந்த ஆட்சியில் தான் நடந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என இவ்வாறு அவர் பேசினார்.