நான் செயல்படாத தலைவராக இருக்கலாம்; ஆனால், மதவாத சக்தியாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கக்கூடிய பாஜகவுக்கு அடிபணிந்து ஆட்சி நடத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் மணமக்களை வாழ்த்திப் பேசினார். செயல்படாத தலைவருக்கு பெயர் செயல் தலைவர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருமண நிகழ்ச்சி ஒன்றில் என்னை விமர்சித்து பேசியிருக்கிறார்.

நான் செயல்படாத தலைவராக இருக்கலாம். ஆனால், எடுபுடி முதலமைச்சராக இருக்கக்கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம் என்றார். மதவாத சக்தியாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கக் கூடிய பாஜகவுக்கு அடிபணிந்து ஆட்சி நடத்துகிறது தமிழக அரசு என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

நீட் தேர்வு, சமஸ்கிருதம், இந்தி மொழி திணிப்பு என மாநிலத்தின் உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசுக்கு எடுபுடி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.

சென்னை - சேலம் 8 வழிச்சாலையை நாங்கள் வேண்டாம் என்று கூறவில்லை. மக்களுடைய கருத்துக்களைக் கேட்டு அதனால் எவ்வளவு ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள், எவ்வளவு ஏக்கர் நிலம் பாதிக்கப்படுகிறது என்பதைப் பற்றி கருத்தாய்வு கூட்டத்தையும், கலந்தாய்வு கூட்டத்தையும் நடத்தி மக்களுடைய கருத்துக்களை கேட்டு அதற்குப் பிறகு அந்த திட்டத்தை நிறைவேற்றலாம் என்றார்.

8வழிச்சாலைக்கு பதில் மாற்று வழிப்பாதையை கண்டுபிடித்து திட்டத்தை நிறைவேற்றலாம் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆனால், எவ்வளவு கமிஷன் வாங்கலாம் என்பது பற்றிதான் முதலமைச்சர் முயற்சித்துக் கொண்டிருக்கிறார் என்று மு.க.ஸ்டாலின் அப்போது பேசினார்.