நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் எனது அறைகூவலை ஏற்று நிலம் ஆதாரத்தை ராமதாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று மு.க.ஸ்டாலின் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் எனது அறைகூவலை ஏற்று நிலம் ஆதாரத்தை ராமதாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று மு.க.ஸ்டாலின் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்தை அண்மையில் பார்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதை வெகுவாக பாராட்டியிருந்தார். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் என்றும் இது படம் மட்டுமல்ல பாடம் என்றும் அதில் தெரிவித்திருந்தார். 

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று முன்தினம் தனது டுவிட்டரில், அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம் என விமர்சித்திருந்தார். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸின் குற்றச்சாட்டுக்கு நேற்று விளக்கமளித்த மு.க.ஸ்டாலின், முரசொலி இடம் தொடர்பான நகல் ஆவணத்தையும் டுவிட்டரில் ஆதரமாக வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், மீண்டும் இன்று டுவிட்டரில் பதிவிட்டிருந்த ராமதாஸ் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே? நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா? என கேள்வி எழுப்பினார். 

இதற்கு ராமதாஸின் கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அதில், முரசொலி அலுவலகம் தற்போது இருக்குமிடம் பஞ்சமி நிலம் எனும் பச்சைப் பொய் ஒன்றை மருத்துவர் அய்யா ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 'அது பஞ்சமி நிலமல்ல, பட்டா நிலம் என்பதை ஆதாரத்துடன் அவருக்கு பதிலாக பதிவு கொடுத்தேன். "அவர் பஞ்சமி நிலம் என நிரூபித்தால் நான் அரசியலைவிட்டு விலகத் தயார். இதை பஞ்சமி நிலம் என அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அவர் கூறியது பச்சைப் பொய் என்பதை ஊர்ஜிதம் செய்தால் அவரும், அவரது மகன் அன்புமணியும் அரசியலைவிட்டு விலகத் தயாரா என அறைகூவல் விடுத்திருந்தேன்.

நான் விடுத்த அறைகூவலை அவர் ஏற்பதாக உறுதிசெய்தால், அவர் இப்போது கேட்கும் நிலப்பதிவு ஆதாரம், மூல ஆதாரத்தைக் காட்டிட நான் தயார். மருத்துவர் அய்யா நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் அறைகூவலை ஏற்று ஆதாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம். நான் தயாராக இருக்கிறேன். விவகாரத்தை திசை திருப்பாமல், அவரது வழக்கமான பாணியில் நழுவிடாமல் இந்தமுறை அறைகூவலை ஏற்பார் என எதிர்பார்க்கிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.