தி.மு.க கூட்டணியில் தற்போது வரை ம.தி.மு.கவை உறுதிப்படுத்தாமல் இருப்பதால் வைகோ புலம்பும் நிலைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    
சட்டமன்ற தேர்தல் தோல்வி, நடராஜன் மறைவு போன்றவற்றை தொடர்ந்து வைகோ அரசியல் ரீதியாக தனது நிலைப்பாட்டை திடீரென மாற்றிக் கொண்டு தி.மு.கவை ஆதரித்தார். தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க உள்ளது என்றும், தேர்தலில் தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க போட்டியிடும் என்றும் அவராகவே கூறி வந்தார். மேலும் ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்காமல் ஓயப்போவதில்லை என்றும் வைகோ மேடைகளில் முழங்க ஆரம்பித்தார்.

 

இதனால் தி.மு.க – ம.தி.மு.க கூட்டணி உறுதி என்றும், நாடாளுமன்ற தேர்தலில் ம.தி.மு.கவுக்கு விருதுநகர், ஈரோடு தொகுதிய ஒதுக்க தி.மு.க முன்வந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் தான் தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க இல்லை என்கிற குண்டை தூக்கிப் போட்டார் துரைமுருகன். 

 

இதனால் வெகுண்டு எழுந்த வைகோ, தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க இருக்கிறதா என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.  ஆனால் தெளிவுபடுத்துவற்கு பதிலாக வைகோவை நேரில் அழைத்து கை குலுக்கி அனுப்பி வைத்தார் ஸ்டாலின். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது கூட தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க இருப்பதாக ஸ்டாலின் குறிப்பிடவில்லை. 

இதனால் வைகோ கிட்டத்தட்ட மனம் நொந்த நிலைக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. முன்கூட்டியே தி.மு.கவை ஆதரித்து பேசிவிட்டதால் தற்போதைக்கு வேறு கூட்டணிக்கு செல்வது அவ்வளவு நன்றாக இருக்காது. அதே சமயம் தி.மு.கவும் கூட்டணியில் சேர்த்தாலும் கூட அவர்கள் கொடுக்கும் தொகுதியைத்தான் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டணி விஷயத்தில் அவசரப்பட்டுவிட்டதாகவும், தப்பு கணக்கு போட்டுவிட்டதாகவும் வைகோ புலம்ப ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.