முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவாளரா? அல்லது அமமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆதரவாளரா என்கிற குழப்பம் ஒரு புறம் நிலவுகிறது. இந்நிலையில் தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் திமுகவுடன் ரகசிய நட்பில் இருப்பது தெரிய வந்துள்ளது. 

கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், மனித நேய ஜனநாயக கட்சியின் தலைவர், தமிமுன் அன்சாரி ஆகியோர் இணைந்து வெற்றி பெற்றார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, மூவரும் தி.மு.க. பக்கம் தாவ இருந்தார்கள். ஆனால், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், கட்சித் தாவல் தடை சட்டம் பாயும் என பதுங்கி விட்டனர்.  

இந்த நிலையில் கடந்த மே 30ம் தேதி திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாதிரி சட்டமன்ற கூட்டத்தில் ’’கருணாஸ் கலந்து கொண்டது ஞாபகம் இருக்கலாம். அப்போது தமிழக அரசை விரைவில் கலைத்து விட்டு ஸ்டாலின் தலைமையில் புதிய அரசை உருவாக்க வேண்டும்’’ என பேசி ஆளும்தரப்பை ஆத்திரப்படுத்தினார். அடுத்து டி.டி.வி.தினகரனுடன் ஒட்டி உறவாடினார் கருணாஸ். சாதி குறித்து சர்ச்சையாக பேசிய கருணாஸ் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். அடுத்து சிறையில் இருந்து வந்த கருணாஸ் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். 

ஆனாலும் கருணாஸ் டி.டி.வி.தினகரன் அணியில் இருப்பதாகவே நம்பப்பட்டது. 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க தீர்ப்பிற்கு முன் குற்றாலம் செல்ல ஆலோசனை நடந்தபோது கருணாஸும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆனால் தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகிய இருவரும் எந்தப்பக்கம் இருக்கிறார்கள் என வெளிப்படுத்திக் கொள்ளவேயில்லை. ஆனாலும், மூவரும், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுடன் ரகசிய நட்பில் இருந்து வருகிறார்களாம். அந்த நட்பின் அடையாளமாக வரும்,16-ம் தேதி, கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு, இந்த மூவருக்கும் அழைப்பு விடுக்க, தி.மு.க., தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆனால், இதில், தனியரசு மட்டும், 'எனக்கு அழைப்பு வந்தாலும், விழாவில் கலந்து கொள்ள மாட்டேன்' என கட்சியினரிடம் திட்டவட்டமாக கூறிவிட்டாராம். ‘காரணம் கேட்டால், திமுகவுடனான ரகசிய நட்பு அப்படியே தொடரட்டும். வெளிப்படையாக காட்டிக் கொண்டால் சிக்கல் எழும்’ என அச்சப்படுகிறார். தமிமுன் அன்சாரி கலந்து கொள்வாரா என்பது தெரியவில்லை. ஆனால், கருணாஸ் நிச்சயம் பங்கேற்க உள்ளார். கருணாஸ், டி.டி.வி.தினகரன் ஆதரவாளரா? அல்லது மு.க.ஸ்டாலின் ஆதரவாளா? எனத் தெரியாமல் குழம்பித் தவித்து வந்தனர். இந்நிலையில் இரட்டை இலையில் வெற்றி பெற்றுவிட்டு தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகிய இருவரும் ஸ்டாலினுக்கு விஸ்வாசம் காட்டுவது தெரிய வந்துள்ளதால் அதிமுக உடன்பிறப்புகள் கொதிக்கத் தொடங்கியுள்ளனர்.