பிறக்காத குழந்தைக்கு பெயர் வைத்த கதையாக இருக்கிறது திமுகவின் நிலை. முதல்வராக ஸ்டாலின் பதவியேற்கும் தேதி மட்டுமல்ல. அமைச்சர் பட்டியலையும் தயார் செய்து விட்டு 27ம் தேதிக்காக காத்திருகிறது திமுக தலைமை.

23ம் தேதி ஓட்டு எண்ணிக்கை முடிவில் இடைத்தேர்தலில் 22 தொகுதிகளையும் அப்படியே அள்ளி திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துவிடும் என கணக்குப்போட்டு வருகிறது அக்கட்சி தலைமை. இதனை உறுதியாக நம்பும் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போதே இந்தக் கணக்கை மக்களுக்கே புரியும் வகையில் கூறி வருகிறார். அதாவது காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளையும் சேர்ந்து திமுகவின் எம்.எல்.ஏ.,க்கள் பலம் 97 ஆக உள்ளது. 22 தொகுதிகளில் நிச்சயம் திமுக வெற்றி பெறும். ஆட்சியமைக்க 117 எம்.எல்.ஏக்களின் பலம் இருந்தால் போதும். அது திமுகவுக்கு நிச்சயம் கிடைக்கும்’’ எனக் கூறி வருகிறார் ஸ்டாலின்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக இப்படி ஸ்டாலின் இப்படிப்பேசுகிறார் என நினைத்திருந்தால் உண்மையில் திமுக ஆட்சி அமைத்து அவர் முதல்வராக பதவியேற்கும் நாளையும் குறித்து விட்டு குஷியாகி வருகிறார்கள். தேதியை குறித்த கையோடு பதவியேற்பு விழா நடத்த உள்ள அரங்கத்தையும் தயார் செய்து வருகிறார்கள் உடன்பிறப்புகள். அதற்காக இப்போதே அண்ணா அறிவாலயம் பரபரத்து கிடக்கிறது. எப்போதாவது அறிவாலயம் வரும் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி இப்போது அடிக்கடி அறிவாலயத்திற்கு விசிட் அடித்து விழா ஏற்பாடுகளை முடுக்கி விட்டு வருகிறாராம். ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க குறித்து வைக்கப்பட்டுள்ள நாள் மே- 27.  

இந்தப்பாய்ச்சல் அத்தோடு நின்றால் பரவாயில்லை. அமைச்சர் பட்டியலையும் தயாரித்து விட்டார்களாம். அதன்படி கே.என்.நேருவுக்கு பொதுப்பணிதுறையும், உதயநிதி ஸ்டாலினின் நண்பரும், திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ மகேஷ் பொய்யாமொழிக்கு உள்ளச்சித்துறை அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட இருக்கிறது. மகேஷ் ஆதரவாளர்கள், அவரை, அமைச்சரே என்று இப்போதே கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். 

ஒருவேளை மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலரை இழுத்து வந்து முதல்வர் ஆகி விட வேண்டும் என்கிற திட்டத்தையும் வைத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். சில தினங்களுக்கு முன்பிரிருந்து, ’ நான் கருணாநிதி மகன் என்பதை நிரூபிப்பேன். நான் சாதாரண ஆள் இல்லை’ என்பதை அழுத்தம் திருத்தமாக மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். அதன் பின்னணி என்னவென்றால் கருணாநிதியை போல நானும் காரியக்காரன் தான். அதிமுக எம்.எல்.ஏக்களை தூக்கியாவது ஆட்சிக்கு வருகிறேன்’’ என்கிற தொனியில் அவரிடம் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். 

ஆக மொத்தத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியல் தற்போதைய வெப்பத்தை விட இருமடங்கு அதிகமாகி உஷ்ணத்தில் தகிக்கப்போவது உறுதி..!