Asianet News TamilAsianet News Tamil

’தொடை நடுங்கும் அடிமை அதிமுக...’உள்ளாட்சி தேர்தலுக்கு மு.க.ஸ்டாலின் சவால்..!

இடைத்தேர்தலில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம் என்பது உண்மை. அதே நேரத்தில் அதிமுக வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது மாயை என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

MK Stalin's Challenge to Local body Elections
Author
Tamil Nadu, First Published Nov 4, 2019, 4:56 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’2019, நாடாளுமன்றத் தேர்தல் களத்திலும், அதனுடன் நடந்த இடைத்தேர்தல்களிலும், கழகம் அடைந்த மகத்தானதும் களிப்பூட்டுவதுமான வெற்றிக்குப் பிறகு நடக்கும் பொதுக்குழுக் கூட்டம், வரும் 10ஆம் தேதி - ஞாயிற்றுக் கிழமையன்று கூடவிருக்கிறது.

"அண்மையில் நடந்த இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை மறந்தது எப்படி?" என நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது. ஏனெனில், நான் எப்போதும் உங்களில் ஒருவன்தானே! உங்களின் மன ஓட்டத்தை உள்ளது உள்ளபடி அறிந்தவன்தானே!MK Stalin's Challenge to Local body Elections

கழகத் தலைவர் என்ற பொறுப்பில் இருந்தாலும், முன்னோடும் தொண்டனாகவே என்னைக் கருதிக் கொண்டிருக்கிறேன். எதையும் எவரிடமிருந்தும் மறைக்காமல், உண்மை நிலவரங்களை மறக்காமல், இயக்கத்தின் நலன்- வளர்ச்சி ஒன்றை மட்டுமே இலக்காகக் கொண்டு, திறந்த மனதுடன் கலந்தாலோசிக்கக் கூடுவதுதான் கழகப் பொதுக்குழு. வெற்றி பெற்றால் வெறிகொண்டு ஆடுவதும் கூடாது. தோல்வி வந்தால் துவண்டு விடுவதும் கூடாது!"என்பதுதான் பேரறிஞர் அண்ணா அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களும் நமக்குக் கற்றுத் தந்துள்ள அரசியல் பாடம். அதனை அப்படியே நெஞ்சில் ஏந்திக் கொண்டுதான், பொதுக்குழு கூடுகிறது.

வெற்றி பெற்ற போது நாம் வகுத்த வியூகங்கள் என்ன? களத்தில் வெளிப்படுத்திய உழைப்பு எத்தகையது? இவை அனைத்தும் இரு தொகுதிகளுக்கான களத்தில் என்னவாயிற்று? ஆளுந்தரப்பின் அதிகார துஷ்பிரயோகப் பாய்ச்சலைக் கணிக்க முடியாத சுணக்கம் நம்மிடம் இருந்ததா? ஒருங்கிணைப்பு குறைந்ததா? தோல்விக்கான உண்மையான, முழுமையான காரணங்கள் என்னென்ன? என்பவை அனைத்தும், உடன்பிறப்புகளின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தும் வகையில், பொதுக்குழுவில் நேர்மையாக விவாதிக்கப்படும்.

MK Stalin's Challenge to Local body Elections

நாம் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம் என்பது உண்மை. அதே நேரத்தில் ஆளுந்தரப்பினர் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது மாயை. அனைத்து நிலைகளிலும் படுதோல்விகளையே கண்டுள்ள அடிமை அரசு, எல்லோரையும் இதிலும் ஏமாற்றிடும் எண்ணத்தோடு, தனது புண்ணுக்கு, தானே புனுகு தடவி மறைக்கும் முயற்சியாக, இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றியை, சில ஊடகங்களின் உள்நோக்கம் கொண்ட உதவியுடன், கையாள நினைக்கிறது.

இந்த இடைத்தேர்தலில் மக்களின் ஆதரவு உண்மையாகவே தங்களுக்குக் கிடைத்திருப்பதாக ஆள்வோர் நம்பினால், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஏன் தொடை நடுங்கிட வேண்டும்? "ஓட முடியாத குதிரைக்கு சறுக்கியது சாக்கு" என்பது போல, உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் துணிவில்லாத அ.தி.மு.க. அரசு, நியாயமான இட ஒதுக்கீட்டின்படி தேர்தல் நடத்தக்கோரி கழகம் தொடர்ந்த வழக்கைக் காரணம் காட்டி இழுத்தடித்து, நீதிமன்றங்களால் உச்சந்தலையில் குட்டுக்கு மேல் குட்டு வாங்கியுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி நிர்வாகம் தொடங்கி அனைத்தும் சீரழிந்து கிடக்கிறது. சாலையில் உள்ள குழிகளைச் சரிசெய்ய வக்கில்லை. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை உயிருடன் மீட்பதில் முறையான திட்டமில்லை. ஒவ்வொருவர் உள்ளத்தையும் பதற வைத்த அந்த நிகழ்வில் மட்டுமல்ல, ஒவ்வொரு இல்லத்திலும் அதிர்வை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், பெரிய மனிதர்களுடன் நெருங்கிய தொடர்புடைய பலர் தப்பிவிட, சிக்கிய இருவரும்கூட குண்டர் சட்டத்திலிருந்து தப்பிக்கின்ற வகையில் அரசு மற்றும் காவல்துறை மெத்தனப் போக்குடன் அலட்சியமாகச் செயல்படுகிறது.

அதே நேரத்தில், தமிழகத்தின் தனித்துவத்தையும் தமிழர்களின் உரிமைகளையும் பறிக்கும் மத்திய அரசின் திட்டங்களை, ராஜாவை விஞ்சும் ராஜ விசுவாசியாக இருந்து செயல்படுத்துவதில், அடிமை அரசான அ.தி.மு.க.வுக்கே முதலிடமாகும். அதற்கு அண்மைக்கால எடுத்துக்காட்டு, 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வைத் திணித்து மத்தியஅரசு உத்தரவிடுவதற்கு முன்பே, புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறது.

நீதிக்கட்சி ஆட்சி தொடங்கி, ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலமாகத் தமிழகத்தில் சமூக நீதி வழியாக ஏற்பட்டுள்ள கல்வி மறுமலர்ச்சி என்பது, தலைமுறை தலைமுறையாகப் படிக்க முடியாமல் முடக்கப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இளைய தலைமுறையினரை இன்று மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் விஞ்ஞானிகளாகவும் இன்னும் பிற துறைகளிலும் சிறந்து விளங்கச் செய்கிறது. அந்த நிலையைத் தகர்த்திடும் வகையில், மத்திய அரசு திணிக்க நினைப்பதுதான், புதிய கல்விக் கொள்கை.

ஏழை – எளிய – கிராமப்புற - ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதறடித்து உயிர் குடித்த, ‘ஆள்மாறாட்ட’ புகழ் நீட் தேர்வு போன்ற கொடுமைதான் புதிய கல்விக் கொள்கை. அதன் முன்னோட்டம்தான், 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு சிறார்கள் மீது திணிக்கப்படும் பொதுத்தேர்வு. தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறை என ஒன்று இருக்கிறதா, அதில் என்ன நடக்கிறது என்பது அந்தத் துறையின் அமைச்சருக்குத் தெரிகிறதா என்பதே புரியாத நிலை உள்ளது.MK Stalin's Challenge to Local body Elections

பள்ளிகளில் மதவாத இயக்கங்கள் செயல்படும் ஆபத்தான போக்கை பள்ளிக்கல்வித் துறை அதிகாரியே சுற்றறிக்கை மூலம் அம்பலப்படுத்தி நடவடிக்கை எடுக்கச் சொன்ன நிலையில், துறையின் அமைச்சர் செங்கேட்டையன் அதனை மறுத்து மழுப்பலாக விளக்கம் அளிப்பதன் மூலம், இவர்கள் எந்த அளவுக்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு அஞ்சியஞ்சிச் சுருண்டிருக்கிறார்கள் என்பது விளங்கும்.

சும்மாவா? எத்தனையெத்தனை ரெய்டுகள்! திறனற்ற இவர்களின் மோசமான செயல்பாடுகளால், இந்தியாவுக்கே முன்னோடித் திட்டமான தலைவர் கலைஞரின் “பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம்” எனும் சமூக நீதித் திட்டம் சிதைக்கப்படும் கொடுமையை “நியூஸ் மினிட்” ஊடகம், காட்சிகள் மூலமாகப் பதிவிட்டுள்ளது. இப்படி எத்தனையோ சீரழிவுகளின் கிடங்காக தமிழகத்தை மாற்றிக் கொண்டிருக்கிறது அடிமை அ.தி.மு.க. அரசு’’என அவர் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios