சாலை ஒப்பந்த பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டதில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை, திமுக ஆட்சியில் தான் டெண்டர் விட்டதில் பல முறைகேடுகள் நடந்துள்ளன என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசு ஒப்பந்தங்கள் என் உறவினருக்குக் கொடுத்திருப்பதாக சொல்லுகிறார்கள். ரத்த உறவுகளுக்கு மட்டுமே டெண்டர் கொடுக்கக்கூடாது. என் சம்பந்தி ரத்த உறவினர் அல்ல என்பதை ஏற்கனவே கூறியிருக்கிறேன். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் திரும்பத்திரும்ப உண்மைக்கு மாறாக பேசி வருகிறார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க தகுதியில்லை. அவருக்கு தி.மு.க., ஆட்சியில் 10 டெண்டர் சிங்கில் டெண்டராக விட்டிருக்கிறார்கள். அவர்கள் ஆட்சியில் ஒரு கி.மீ. சாலைக்கு 8.78 கோடிக்கு விட்டிருக்கிறார்கள். 

நாங்கள் ஆன் லைன் மூலமே டெண்டர் விடுகிறோம். இதில் தவறு நடக்க வாய்ப்பே இல்லை. நாங்கள் டெண்டர் விடும்போது ஒரு லிட்டர் டீசல் 53 ரூபாய் தற்போது ஒரு லிட்டர் டீசல் 80 ரூபாய். இதனால் டெண்டர் எடுத்தவர்கள் பல கோடி நஷ்டம் அடைந்திருக்கிறார்கள். நாங்கள் யாருக்கும் சலுகை காட்டவில்லை. ஆனால் தி.மு.க., பல டெண்டர்களில் டெண்டர்தொகையை விட 83% வரை பல மடங்கு உயர்த்தி முறைகேடுகள் செய்திருக்கிறார்கள்.

  

தோண்டத்தோண்ட பல முறைகேடுகள் வெளியே வருகிறது. அவர்களைப்போல உடனே வழக்கு போட மாட்டோம். வழக்கறிஞர்களிடம் கலந்து ஆலோசித்து வழக்கு போடுவோம். எதிர்க்கட்சித் தலைவர் விரத்தியின் விளிம்புக்கு போய் விட்டார். சர்க்கஸ் என்பது சாதாரண விஷயம் அல்ல. திறமையைக் காட்ட வேண்டும். நான் திறமையைக் காட்டி மக்களிடம் வெற்றி பெற்றிருக்கிறேன்.

எங்க ஆட்சியில் முறைகேடு, ஊழல் நடைபெறவில்லை. அம்மா இறந்ததும் இந்தக் கட்சி அழிந்துவிடும், உடைந்து விடும் என நினைத்தார். அது நடக்கவில்லை என்பதால் ஊழல் என்ற ஆயுதத்தை எடுத்திருக்கிறார் என்று மு.க.ஸ்டாலின் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக கூறியுள்ளார்.