காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக மாநில அரசு அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. மேலும் அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு உள்ளது. 

காவிரியின் குறுக்கே அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு காவிரி நீர் வருவது ஒட்டுமொத்தமாக தடுத்து நிறுத்தப்பட்டு விடும். இதனால் டெல்டா மாவட்டங்களில் ஒரு போகம் கூட நெல் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்படும் என்பதால் தமிழகத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. விவசாய சங்கங்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற தி.மு.க. தோழமை கட்சிகள் கூட்டத்தில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு மத்திய அரசு வழங்கிய அனுமதியை உடனே ரத்து செய்யக்கோரி  இன்று திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவின்படி திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு தி.மு.க. தோழமை கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். 

ஆர்ப்பாட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதாது. புயல் பாதிப்புக்கு பின்னர் இன்னும் மக்கள் அரசின் நிவாரணம் கிடைக்காமல் தவிக்கின்றனர். 

இந்த எடப்பாடி புயல் பாதிப்பிலும்கூட கமிஷன் கிடைக்குமா என்றுதான் நினைக்கிறது. கோ-ஆப்டெக்ஸில் லட்சக்கணக்கான போர்வைகள், சமுக்காளங்கள் ஸ்டாக் இருக்கிறது. ஆனால் அங்கே கொள்முதல் செய்யவில்லை. அதற்கு மாறாக தனியாரிடம் கொள்முதல் செய்கிறார்கள். புயல் பாதிப்பில் மக்கள் கண்ணீர் விடும்போது கூட எவ்வளவு கறக்கலாம் என்று நினைக்கிறார்களே தவிர மக்களின் துயரை துடைப்பதற்கு தயாராக இல்லை. 

மேகதாது அணை திட்ட அறிக்கை தயார் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. காவிரியில் தண்ணீரை முழுமையாக நிறுத்த கர்நாடக அரசு தொடர்ந்து அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. இன்றைக்கு நடக்கும் ஆர்ப்பாட்டம் மேகதாது பிரச்சனைக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்காகவும்தான். 

அரசியல் மாற்றம் ஏற்படாமல் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது. மத்தியிலும், மாநிலத்திலும் அரசியல் மாற்றத்திற்கான காலம் நெருங்கிவிட்டது. எங்கள் அணியின் முதல் அமைச்சர் வேட்பாளர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான். தமிழக மக்கள் அதனை நோக்கி திரள வேண்டும் என்றார்.