விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக பணம் என்ற கிலுகிலுப்பையை மக்களுக்கு காட்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அதிமுக பதிலடி கொடுத்துள்ளது. 

இதுதொடர்பாக  அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் "இதோ பார்ரா.. பெட்டி பெட்டியாய், கத்தை கத்தையாய் கிலுகிலுப்பைகளை கட்டி வைத்துக் கொண்டு வேலூர் நாடாளுமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலையே நிறுத்தியவர்கள் யார்? வன்னியர்களுக்கு  இட ஒதுக்கீடு தருகிறேன், உதயசூரியன் சின்னத்தை பெற்றுத் தந்த கோவிந்தசாமி படையாச்சிக்கு மணிமண்டபம் கட்டுகிறோம் என்றெல்லாம் பல கிலுகிலுப்பைகளை ஆட்டிப் பார்த்தும் மூக்கறுபட்டது திமுக தானே.

தாங்கள் வெற்றி பெறும்போது மட்டும் ஜனநாயகம் வென்றது என ஏகத்துக்கு கூவுவதும், பிறர் வெற்றி பெற்றுவிட்டால் பணநாயகம் வென்றது எகத்தாளம் பேசுவதும், வாக்களித்த மக்களை அவமானப்படுத்துகிற வக்கிர புத்தி அல்லவா? திருமங்கலம் பார்முலா என்று ஓட்டுக்களை விலை பேசுகிற ஈனக் காரியத்தை இந்தியாவுக்கே அறிமுகம் செய்த கட்சி திமுக தானே.

கறி விருந்து நடத்துவது, மது விருந்து வைப்பது, காசுக்கு ஓட்டுக்களை விலை பேசி முடிப்பது. இதையெல்லாம் தடுக்க முனைந்தால் தேர்தல் ஆணையாளரையை மிரட்டுவது இப்படி ஜனநாயகத்திற்கு மாறாக அத்துமீறல்களையும், அடாவடிகளையும், பித்தலாட்டங்களையும் அரங்கேற்றி எப்படியேனும் வெற்றி பெற்று விட வேண்டும் என மலிவான காரியங்களில் ஈடுபடுவது என்றுமே திமுக தான்.

இதையெல்லாம் கடந்து மாற்றுக்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டால் வாக்கு எண்ணிக்கையையே நிறுத்தி தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சித்தலைவரை மிரட்டி தங்கள் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்க வைக்கும் அசிங்கத்தை சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் இன்று சிறையிலே கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் சினா தானாவுக்காக அன்று செப்படி வித்தை செய்ததும் தில்லுமுல்லு கட்சிதான்.

அது மட்டுமா, அடகு வைத்த நகைகளின் ரசீதுகளை ஆயுத்தமாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள், தேர்தல் முடிந்தவுடன் நாங்களே நகைகளை திருப்பி தருகிறோம், கூட்டுறவு வங்கி கடன்களை ரத்து செய்கிறோம், கல்விக் கடன்களை தள்ளுபடி செய்கிறோம் என்றெல்லாம் கிலுகிலுப்பை ஆட்டி ஏழை, எளிய மக்களை ஏய்த்து நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோசடி வெற்றி பெற்றதும் திமுக கட்சி தான்.

ஆனால், இப்போது மக்கள் விழித்து கொண்டுவிட்ட நிலையில் திமுக பணத்தை இனத்தை, பிணத்தை வைத்து அரசியல் செய்கிற ஒரு பாசிச கட்சி என்பது தமிழக மக்களுக்கு தேள்ளத் தெளிவாக புரிந்துவிட்டது. அதேவேளையில் மக்களுக்காக தாங்கள் ஆற்றியிருக்கும் தொண்டுகளையும், மகத்தான சாதனைகளையும் கனிவோடு எடுத்து வைத்து சாதனைகள் தொடர இன்னும் சந்தர்ப்பங்கள் தாருங்கள் என அன்போடு வேண்டுகிற அதிமுக தான் மக்களுக்கான இயக்கம் என்கிற தீர்க்கமான முடிவுக்கு தமிழக மக்கள் வந்துவிட்டனர். இதன் எதிரொலி தான் வடதிசையில் விக்கிரவாண்டியிலும், தென் புலத்தில் நாங்குநேரியிலும் இரட்டை இலைக்கு கிடைத்திருக்கும் இமாலய வெற்றியாகும். 

இந்த இரண்டு தொகுதிகளின் வெள்ளோட்ட வெற்றி சத்தியமாய் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டத்தை சொல்லும் தமிழக மக்களின் ஜனநாயக தெளிவு என்பது திமுகவுக்கு விளங்கி விட்ட காரணத்தால் அதிகார வெறி பிடித்து அலையும் ஸ்டாலின் அவதூறு பேசுகிறார். ஓட்டு போட்ட மக்களை கிலுகிலுப்பைக்கு மயங்கும் ஏமாளிகள் என்பதாக அவமானப்படுத்துகிறார். கோல் அடிக்க முடியாத கோழை ஆள் அடிப்பான் என்பது போல நேர்வழியில் நின்று வெற்றிக் கோட்டை எட்ட முடியாத திமுகவினர் விரக்தியுற்று செய்கின்ற விமர்சனம் தான் இந்த கிலுகிலுப்பை எல்லாம். என்ன செய்வது வினாசகாலே விபரீத புத்தி என்பார்கள். அது இப்போது திமுகவுக்கு தொடங்கிவிட்டது என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளது.