சென்னையில் பேனர் விழுந்ததால் விபத்தில் சிக்கி உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். 

சென்னை பள்ளிக்கரணையில் கடந்த 12-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீயின் மீது, பேனர் விழுந்ததில் அவர் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி சுபஸ்ரீ மீது மோதியதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது குடும்பத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 

நேற்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குரோம்பேட்டை சென்று சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் வீட்டுக்குச் சென்று, அவரது பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறோம். அப்போது, சுபஸ்ரீயின் தந்தை ரவியிடம் என்னிடம் பேசும்போது, ‘பேனரால் ஏற்படும் உயிரிழப்பு இதுவே கடைசியாக இருக்கட்டும். இது தொடரக்கூடாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்றார்.

அவர் சொன்னது மறக்க முடியாது. மேலும், பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினருக்கு திமுக அறக்கட்டளை சார்பில் 5 லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறோம்.  என்னதான் நிதி உதவி வழங்கினாலும் அவர்களுக்கு அது ஆறுதலாக அமையாது. அவரது தாய், தந்தைக்கு ஆறுதலை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கிறேன் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.