ஜனவரி 29ம் தேதி முதல் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற புதிய கோணத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

சென்னை கோபாலபுரத்தில் கருணாநிதி இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- விடியலை நோக்கி, மக்கள் கிராம சபையை தொடர்ந்து உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற புதிய தேர்தல் பிரச்சாரத்தை ஜனவரி 29ம் திருவண்ணாமலையில் இருந்து ஸ்டாலின் தொடங்குகிறார். காலை, மாலை என 30 நாட்களுக்கு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.  மக்களின் பிரச்சனையை தீர்ப்பதே எனது முதல் பணி என உறுதியளித்துள்ளார். 

திமுக ஆட்சிக்கு வந்ததும் போர்க்கால அடிப்படையில் மக்கள் பிரச்சனைகளுக்கு 100 நாளில் தீர்வு காணப்படும். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரத்தில் மக்களிடம் விண்ணப்பம் தந்து பிரச்சனைகள் கேட்டறியப்படும். விண்ணப்பத்தில் மக்கள் குறைகளை எழுதித்தந்தால் 100 நாட்களில் பிரச்சனை தீர்க்கப்படும். மக்கள் பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை நானே சேகரித்து சீல் வைத்து மக்களுக்கு ரசீது வழங்குவேன். 

மக்கள் குறைகளை எழுத்து மூலம் தெரிவிக்க படிவங்கள் வழங்கப்படும் www.stalinani.com என்ற இணையதளம் வாயிலாக புகார் அளிக்கலாம். மக்கள் பிரச்சினைகளை 91971091710 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும், தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.