லண்டன் சென்று ஒரு மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்து விட்டு கோபாலபுரம் சென்ற போது தனது சொந்த மகன் சிகிச்சை பெற்று வந்ததைபோல தலைவர் கலைஞர் அவரை கட்டிப்பிடித்துக்கொண்டு மகிழ்ந்தார் என கண்ணீர் மல்க பழைய நினைவுகளை மு.க.ஸ்டாலின் பகிர்ந்து கொண்டார். 

மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உருவப்படத்தை மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அறிவாலயத்தில் வைக்கப்பட்டு இருந்த ஜெ.அன்பழகனின் உருவப்படத்தை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காணொலி மூலம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இவருடன் இளைஞரணி கழக தலைவர் உதயநிதி மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

ஜெ.அன்பழகன் படத்திறப்பை தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்;- ஜெ.அன்பழகன் உடல் எப்படி என்பது அனைவருக்கும் தெரியும். 1996ம் ஆண்டு லண்டன் சென்று ஒரு மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டு தமிழ்நாட்டிற்கு வந்தார். விமானம் நிலையம் சென்று அவரை நான் வரவேற்றேன். நேராக வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. தலைவரை போய் பார்க்க வேண்டும் என்றார். நானும் சொன்னேன் தலைவர் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். கோபாலபுரம் சென்ற போது லண்டன் சென்று தனது சொந்த மகன் சிகிச்சை பெற்று வந்ததைபோல தலைவர் கலைஞர் ஜெ.அன்பழகனை கட்டிப்பிடித்துக்கொண்டு மகிழ்ந்தார். 

ஆனால், இன்றைக்கு தலைவர் கலைஞரும் இல்லை, ஜெ.அன்பழகனும் இல்லை. இருவருமே நம்மைவிட்டு அடுத்தடுத்து மறைந்துவிட்டார்கள். தலைவர் அவர்களை மேடையில் வைத்துக்கொண்டே நம்முடை அன்பழகன் அவர்கள் பலமுறை பேசியுள்ளார். தலைவர்கள் அவர்களே நான் போனஸ் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். என்னுடைய உடல்நிலைப்பற்றி அனைவருக்கும் தெரியும். எனது வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் முடியலாம். அப்படி முடியர நேரத்துல என்னுடைய உடல் மீது உங்களுடைய கண்ணீர் விழ வேண்டும் என்று பேசினார். 

அந்த உணர்ச்சிகரமான உரையை கேட்ட அனைவரும் கைதட்டினர். அடுத்து பேசிய நம்முடைய கலைஞர் என்ன பேசினார் தெரியுமா? நீங்கள் அனைவரும் கை தட்டினர்கள். ஆனால், ஜெ.அன்பழகனின் பேச்சை கேட்டு என்னுடைய மனசு எவ்வளவு கவலைப்பட்டிருக்கும் என்று நினைத்து பார்த்தீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.  ஆகவே, ஜெ.அன்பழகனின் பேச்சு கேட்டு கலங்கியவர் தான் கலைஞர் என்று பழைய வரலாறை கூறி மு.க.ஸ்டாலின் கலங்கினார்.