அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீர்களா? என அமைச்சர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை மாநகராட்சியில் சொத்து வரியுடன் சேர்த்து குப்பையைச் சேகரிப்பதற்கு ஜனவரி 1-ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது. இதன்படி வீடுகளுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரையும், திருமண மண்டபங்களுக்கு ரூ.1000 முதல் ரூ.10,000 வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கும் தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று கண்டனம் தெரிவித்தார். குப்பை கட்டணம் அறிவிப்பு பேரிடரில் தவிக்கும் மக்களின் அடிவயிற்றில் அடிப்பது என மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார்.

 

மேலும், சென்னை மாநகராட்சியின் குப்பை கொட்டும் கட்டணத்தை ரத்து செய்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட வேண்டும். அதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கட்டுப்படாவிட்டால், திமுக ஆட்சி அமைந்தவுடன், குப்பை கொட்டக் கட்டணம் ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் அறிவித்தார். இதனையடுத்து, இன்று காலை சென்னையில் குப்பைக்கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  தகவல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூல் பக்கத்தில்;- மின் வாரியப் பணிகளைத் தனியாருக்கு ஒப்படைப்பதை எதிர்த்துப் போராடுவோம் என்றேன். வாபஸ் பெற்றார் அமைச்சர் தங்கமணி!

'குப்பை கொட்டவும் வரி' என்ற அறிவிப்பை ரத்து செய்யாவிட்டால், திமுக ஆட்சி வந்து செய்யும் என்றேன். வாபஸ் பெற்றார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி! அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீர்களா? 'எண்ணித்துணிக கருமம்' என அதிமுக அமைச்சர்களைக் கேட்டுக் கொள்கிறேன்!" என தெரிவித்துள்ளார்.

அதிமுக அரசு எதை செய்தாலும் குறை கண்டுபிடித்து வரும் ஸ்டாலின், இந்த குப்பை வரியை பிரச்சாரமாக முன்னெடுத்து மக்கள் மத்தியில் வாக்கு வங்கியை அள்ள திட்டமிட்டிருப்பார் போல் தெரிகிறது. ஆனால் அதிமுக அரசோ முந்திக்கொண்டு வரியை ரத்து செய்து விட்டது. ஏற்கனவே அதிமுக அரசுக்கு பெரும் மக்கள் செல்வாக்கு ஒருபுறம். குறை சொல்ல ஏதாவது கிடைக்குமா? என ஸ்டாலின் கையில் எடுக்கும் அத்தனை அஸ்திரங்களையும் எடப்பாடி அரசு தவிடுபொடி செய்வதால், எங்கே தனது ஆட்சி கனவில் மண் விழுந்து விடுமோ? என்ற அச்சத்தில் ஸ்டாலின் இப்படி எல்லாம் அறிக்கை விட்டு புலம்பி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.