மகாராஷ்டிரா முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள உத்தவ் தாக்கரேவுக்கும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் ஒவ்வொரு நாளும் அரசியல் களம் பரபரப்பாக இருந்து வந்த நிலையில் நேற்றுடன் அனைத்து குழப்பங்களும் முடிவுக்கு வந்துவிட்டது.  பாஜக ஆட்சிக்குப் போதிய பெரும்பான்மை இல்லாததால் தேவேந்திர பட்னாவிஸ் 4 நாட்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினர். பின்னர், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வராக உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டு நாளை முதல்வராக பதவி ஏற்க உள்ளார். 

இந்நிலையில், திமுக தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள உத்தவ் தாக்கரேவையும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரேவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

உத்தவ் தாக்கரேவுக்கு திமுகவின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலக் கட்சியின் தலைவர் ஒருவர் முதல்வராவதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். எதிர்ப்பட்ட தடைகளை எல்லாம் உடைத்து வெற்றி பெற்றுள்ளீர்கள். தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவீர்கள் என நம்புகிறேன் என உத்தவ் தாக்கரேவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சரத் பவாருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மகாராஷ்டிரத்தில் நிலையான ஆட்சியை அமைத்ததற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். எதிர்க்கட்சியினரின் ஒற்றுமைக்கு அடையாளமாக நீங்கள் திகழ்கிறீர்கள். ஜனநாயகம் துடிப்பாக இயங்கவும், அரசியலமைப்புச் சட்டமும் நாடும் வலிமையாக இருக்கவும் இந்த ஒற்றுமை தொடர வேண்டும் என சரத் பவாருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.