திண்ணை பிரச்சாரம் என்ற பெயரில் நாடகத்தை மு.க.ஸ்டாலின் அரங்கேற்றி வருகிறார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

 

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து மு.க.ஸ்டாலின் வீதிவீதியாக சென்று குடிசை வீடுகளின் திண்ணையில் அமர்ந்து மக்களின் குறைகளை அவர் கேட்டறிந்தார். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வரும் திண்ணை பிரசாரத்தை பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் திண்ணை பிரசாரம் என்ற பெயரில் ஸ்டாலின் திண்ணை நாடகம் தன் கட்சியினரை ஏற்கனவே செட்டப்செய்து முன் தயாரித்த கேள்விகளுக்கு பதில் கூறுவதாக நடிப்பு! ஒட்டப்பிடாரத்தில் அடிப்படை வசதிகளை செய்யத்தவறிய 5 முறை ஆண்ட திமுக ஆட்சி ஏன் செய்யவில்லை? துணை முதல்வராக ஆண்டபோது தூத்துக்குடி கண்ணில் படவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

 

மதுரையில் பிரச்சாரத்தில் டீ குடிக்க சென்று எதிரில் அழகிரி பனியனுடன் செல்பி எடுக்க செய்த செட்டப் நாடகம். இம்முறை ஒட்டப்பிடாரத்திலும் திண்ணைப் பிரசாரமாக அரங்கேற்றம். அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை...எனக்கூறும் ஸ்டாலின் அவர்களே தூத்துக்குடியில் அனுமதியில்லாத துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு தன் சொந்த தம்பியையே சுட்டுக்கொன்றது உங்கள் கழக உடன்பிறப்பு தானே? திமுகவினரால் சொந்த தம்பிக்கு கூட பாதுகாப்பில்லையே? வன்முறைக்கலாச்சாரம் திமுக தானே என கடுமையாக விமர்சித்துள்ளார். நேற்றும் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளிநடப்புகள், சட்டைகிழிப்பு, போட்டி சட்டமன்றம் நடத்தியும் பயனில்லை, இந்த நம்பிக்கை இல்லா தீர்மானமும் நம்பிக்கை தராறு என விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.