ஆட்சியை கவிழ்த்து குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க மு.க.ஸ்டாலின் முயற்சிப்பதாக, அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
அதிமுகவில் 3 அணிகளாக செயல்பட்டு வருகிறது. இதனால், தமிழக மக்களுக்கான எவ்வித நலத்திட்ட பணிகளும் நடக்கவில்லை என மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், ஆட்சியை கலைக்கும்படி அவர் வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், கோவை தொண்டமுத்தூரில் அரசு கல்லூரி திறப்பு விழா நடந்தது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் வேலுமணி, செய்தியாளர்களிடம் கூறியதாவது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. ஆட்சியில் அமர்ந்த 100 நாட்களில், அவர் 2000 கோப்புகளில் கையெழுத்து போட்டுள்ளார்.
நன்றாக நடந்து வரும் ஆட்சியில், மு.க.ஸ்டாலின் உள்பட பலர், கவிழ்க்க சதி வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அந்த கனவு ஒருபோதும் பலிக்காது. குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க மு.க.ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
அவரை போலவே பலரும், பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அவர்களது முயற்சி அனைத்தும் தோல்வியில் முடியும். ஜெயலலிதா கொண்டு வந்த ஆட்சியை, எடப்பாடி தலைமையிலான அரசு சிறப்பாக செய்து வருகிறது. இதை மக்களும் அறிவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.