நாடும் நமதே நாற்பதும் நமதே என ராகுல் காந்தியிடம் உறுதியளிக்கிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சேலத்தில் பிரச்சாரப் பொதுக்கூட்டட்தில் கலந்துக் கொண்டு, திமுக, காங்கிரஸ் மற்றும் மதிமுக  வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது: அடுத்த பிரதமர் ராகுல்காந்தி என்று நான் அறிவித்த அறிவிப்புக்கு தற்போது ஆதரவு பெருகி உள்ளதாக தெரிவித்தார். நாடும் நமதே நாற்பதும் நமதே என்று ராகுல்காந்திக்கு ஸ்டாலின் உறுதி மொழி அளித்தார். 

ராகுல் வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஹீரோ, மோடி வெளியிட்ட அறிக்கை ஜீரோ, பா.ஜ.க. தனது 5 ஆண்டுகால திட்டங்களைப் பற்றி அறிக்கையில் சொல்லாமல், தனது கனவுகளைத் தான் கூறியிருக்கிறது. ஏழைத்தாயின் மகன் மோடி ஆட்சியில், விஜய் மல்லையா, நீரவ்மோடி கோடிகோடியாக கொள்ளையடிக்கிறார்கள். அவர் கார்ப்பரேட்டுகளுக்கு காவலாளி. மக்களுக்கு அவர் களவாணி தான். ராகுலை மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர் என்று மோடி விமர்சிக்கிறார். ஆனால், அந்த மன்னர் குடும்பத்தை சேர்ந்த ராகுல் தான் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட், விவசாயக்கடன்கள் ரத்து, கல்விக்கடன் என்று ஏழைகளுக்கான திட்டங்களை அறிவித்துள்ளார். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாடு வளர்த்தேன், கோழி வளர்த்தேன், நான் ஒரு விவசாயி, என்கிறார். மக்களுக்கு நீங்கள் என்ன செய்தீர். விவசாயி நாட்டை ஆளலாம், விஷ வாயு நாட்டை ஆளலாமா என கடுமையாக விமர்சித்தார். பிரதமர் மோடி பதவியில் இருந்து மோடி விலக வேண்டும் என்பதே நாட்டு மக்களின் விருப்பம் என்றும், மோடி ஆட்சியில் ஏழைகள் பரம ஏழைகளாக மாறி கொண்டிருக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.