காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தோழமை கட்சித் தலைவர்களான திருமாவளவன், திருநாவுக்கரசர், வீரமணி, ஜவாஹிருல்லா முத்தரசன் மற்றும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரங்கள் காலஅவகாசம் கொடுத்தும் மத்திய அரசு அதை செயல்படுத்தவில்லை. இதனால் தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு அமைக்காததால் தமிழகம் போராட்ட களமாக மாறிவருகிறது. மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடந்து வருகின்றன.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக இன்று அனைத்து கட்சி கூட்டம் திமுக சார்பில் நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்துக்கு திமுக அழைப்பின் பேரில் வைகோ, திருமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் வருகை தந்தனர். இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை செயல்படாத மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் தமிழக அரசு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்துக்கு பின்னர் அரசியல் கட்சி தலைவர்கள் முன்னிலையில் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து வரும் 5-ஆம் தேதி அனைத்து கட்சிகள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். அதேபோல் வரும் 15-ஆம் தேதி தமிழகத்துக்கு வரும் பிரதமர், மத்திய அமைச்சர்களுக்கு கருப்பு கொடி காட்டவுள்ளோம். காவிரிக்காக தமிழக உரிமை மீட்பு பயணம் நடத்துவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார் ஸ்டாலின்.

இதனையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் சென்னை வள்ளுவர் கோட்டத்துக்கு சென்றனர். அங்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அனைத்து கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் திருநாவுக்கரசர், ராமசாமி, திருமாவளவன், கி.வீரமணி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.