காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு, கடந்த 29 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. உச்சநீதிமன்றம் விதித்த 6 வார கால அவகாசம் வரையில் அமைதி காத்துவிட்டு, ஸ்கீம் என்பதற்கு விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு நாடியுள்ளது.

இந்த நிலையில், காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய திமுக சார்பில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாக மு.க.ஸ்டாலின் கூறினார். வரும் 5 ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும், அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

இதன் பிறகு மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து கட்சியி தலைவர்களும், சென்னை வள்ளுவர் கோட்டத்துக்கு சென்றனர். அங்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அனைத்து கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய அரசை ராஜினாமா செய்யகோரும் பதாகைகளை அவர்கள் ஏந்தி இருந்தனர். 

இந்த போராட்டத்தில், திருநாவுக்கரசர், ராமசாமி, திருமாவளவன், கி.வீரமணி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, போலீசார் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்களை கைது செய்தனர். இதனை அடுத்து வள்ளவர்கோட்டத்தில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி, தஞ்சை உள்ளிட்ட பல இடங்களில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.