ஒரே நேரத்தில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மதுரையில் இருந்து சென்னை சென்ற விமானத்தில் பயணித்ததால் அந்த விமானமே களைகட்டியது.

மாதத்திற்கு இரண்டு முறை வார இறுதி நாட்களில் சொந்த தொகுதிக்கு சென்று அங்குள்ள பிரச்சனைகளை கவனிப்பது துணை முதலமைச்சரின் வழக்கம். அப்போது கட்சிக்காரர்கள் வீட்டு திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் கட்சி சார்பிலான விழாக்களிலும் ஓபிஎஸ் பங்கேற்பார். அந்த வகையில் கடந்த வாரம் சென்னையில் இருந்து தேனி சென்ற ஓபிஎஸ் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நேற்று இரவு சென்னை திரும்பினார். இதற்காக அவருக்கு மதுரையில் இருந்து சென்னை செல்லும் விமானத்தில் டிக்கெட் போடப்பட்டிருந்தது.

இதே போல் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி,  செல்லூர் ராஜூ உள்ளிட்டோரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தங்களது தொகுதி நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி விழாக்களில் கலந்து கொள்ள சென்று இருந்தனர். அவர்களும் நேற்று இரவே மதுரையில் இருந்து சென்னை திரும்பினர். இதற்காக அவர்களுக்கும் மதுரை டூ சென்னை விமானத்தில் டிக்கெட் போடப்பட்டிருந்தது. எனவே துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜூ ஆகிய மூவருக்கும் ஒரே விமானத்தில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதே சமயம் நேற்று முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். அதிமுகவில் இருந்த அவர் கடந்த ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணையாமல் அந்த கட்சிக்காக தேர்தல் பணியாற்றினார். அவரை திமுகவில் இணையும் படி ஸ்டாலின் நேரடியாக கேட்டுக் கொண்டார். இதனை அடுத்து ராஜகண்ணப்பன் தனது ஆதரவாளர்கள் ஏராளமானோருடன் நேற்று திமுகவில் இணைந்தார். இதற்காக மதுரையில் பிரமாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று மதுரை சென்ற ஸ்டாலினும் இரவு சென்னை திரும்ப வேண்டியிருந்தது. இதனால் அவருக்கும் நேற்று இரவு மதுரையில் இருந்து சென்னை திரும்பும் விமானத்தில் டிக்கெட் போடப்பட்டிருந்தது. துணை முதலமைச்சர், அமைச்சர்கள் இரண்டு பேர் மற்றும் எதிர்கட்சி தலைவர் என நான்கு முக்கிய பிரமுகர்கள் ஒரே விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தனர். சொல்லி வைத்தாற்போல் நான்கு பேரும் ஒரே சமயத்தில் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

விமான நிலைய லாபியிலேயே அமைச்சர்கள் ஸ்டாலினை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவருக்கு சம்பிரதாயமான ஒரு வணக்கத்தை தெரிவித்துவிட்டு விமானத்தில் ஏறியுள்ளனர். இதற்கிடையே ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் விமானத்தில் ஏறிய பிறகு ஓபிஎஸ்சும் அதே விமானத்திற்குள் ஏறியுள்ளார். ஓபிஎஸ் மற்றும் ஸ்டாலின் இருக்கைகள் சற்று தொலைவில் அதே சமயம் ஓரளவு அருகாமையில் இருந்தது. துணை முதலமைச்சரை பார்த்து மரியாதை நிமித்தமாக ஸ்டாலின் வணக்கம் வைத்துள்ளார். பதிலுக்கு வணக்கம் வைத்த ஓபிஎஸ் அருகே சென்று ஸ்டாலினிடம் நலம் விசாரித்ததாக சொல்கிறார்கள்.

அப்போது அமைச்சர்களும் துணை முதலமைச்சருடன் இணைந்து ஸ்டாலினிடம் சிறிது நேரம் விமானத்தில் பேசிக் கொண்டிருந்தனர். ராஜகண்ணப்பன் எத்தனை பேருடன் திமுகவில் இணைந்தார் என்பது உள்ளிட்ட தகவல்களை கேலியாக செல்லூர் ராஜூ கேட்டதாகவும் அதற்கு ஸ்டாலினும் கிண்டலாக பதில் அளித்ததாக சொல்கிறார்கள். விமானத்தில் நான்கு பெரும் அரசியல் தலைகள் இருப்பதை பார்த்து அவர்களுடன் விமானப்பயணிகள் பலரும் செல்ஃபி உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டுள்ளனர்.

அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தற்போதே திமுக தேர்தலுக்கான வியூகத்தை வகுத்து செயல்பட ஆரம்பித்துள்ளது. இதுபோன்ற ஒரு சூழலில் துணை முதலமைச்சர் - திமுக தலைவர் மற்றம் அமைச்சர்கள் ஒரே விமானத்தில் ஒரே நேரத்தில் பயணித்தது எதேச்சையான ஒன்றா? இல்லை அதில் ஏதும் அரசியல் கணக்கு இருக்குமா? என்பது போகப்போகத்தான் தெரியும்.