திருவாரூர் தொகுதியில, உங்க அப்பா நின்ன இடத்துல சுயேட்சையா நில்லுங்க. நம்ம குடும்பமே பிரச்சாரத்துக்கு வந்து மக்கள்ட்ட நியாயம் கேட்போம் என அழகிரியை அடுத்த லெவலு யோசிக்க வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கலைஞருக்காக இரங்கல் பேரணியை பிரம்மாண்டமாக நடத்தி காட்டி இருக்கும் அழகிரி அடுத்து என்ன செய்ய போகிறார் என்பது தான் அரசியல் தரப்பில் மாபெரும் எதிர்பார்ப்பாக இப்போது இருக்கிறது. ஏற்கனவே கலைஞர் சமாதியில் வைத்து திமுக உடையப்போகிறது என பரபரப்பு பேட்டி கொடுத்தவர் அடுத்ததாக செய்து காட்டி இருக்கும் விஷயம் தான் இந்த பேரணி. பேரணியின் முடிவில் ஏதாவது காரசாரமாக அழகிரி பேசுவார் என எதிர்பார்த்த பலருக்கும் அவரிடம் இருந்து எந்த வார்த்தையும் அப்போது கிடைக்கவில்லை. 

ஆனால் சமீபத்தில் ஒரு ஆங்கில தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டி, மீண்டும் திமுகவிற்கு எரிச்சலை வரவழைத்திருக்கிறது. வரப்போகும் இடைத்தேர்தலில் திருமங்கலம் மற்றும் திருவாரூர் தொகுதிகளில் திமுகவால் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது என தெரிவித்திருக்கிறார் அழகிரி.
 திமுக திருமங்கலம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தலில் நான்காவது இடம் தான் பிடிக்கும் என்றும் கூறி இருக்கிறார்.

ஏற்கனவே அழகிரி இத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டிருப்பது மீண்டும் திமுகவில் நுழைவதற்கு தான் . அழகிரி விஷயத்தில் ஸ்டாலின் எதுவும் சொல்லாமல் இருப்பதால், அந்த கோபத்தில் தான் அழகிரி இப்படி எல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார். இந்த விஷயத்தில் ஸ்டாலின் தரப்பில் இருந்து எந்த பதிலுமே வரவில்லை இதனால் அழகிரிசெம்ம கடுப்பில் இருக்கிறாராம்.

கடந்த சில வருடங்களாக அரசியலில் சரிவை மட்டுமே அழகிரி சந்தித்துக் கொண்டிருப்பது காந்தியை மிகவும் பாதித்திருக்கிறது. கணிசமான காலமாக மீடியா வெளிச்சத்துக்கே வராத காந்தி, கருணாநிதியின் இறுதி சடங்கின்போது சீனுக்குள் வந்தார். ‘காந்தியா இது?’ என்று பலர் அதிரும் வண்ணம் சோர்வின் வடிவமாகவே இருந்தார். 

அழகிரியின் அரசியல் எழுச்சிக்காக நாள்தோறும் வீட்டில் பூஜை வைத்துக் கொண்டிருக்கிறார் காந்தி. துர்கா போல் காந்திக்கு தன் கணவர் தமிழக முதல்வராக வேண்டும்! எனும் எண்ணமெல்லாம் ’இப்போதைக்கு’ இல்லை. ஆனால் தி.மு.க.வில் பழைய இடத்தை அவர் மீண்டும் பெற வேண்டும் எனபதே காந்தியின் ஆசை. ஆனால் அழகிரியை மீண்டும் கட்சிக்குள் இணைக்க ஸ்டாலின் மெளனித்து வருவது காந்தியை மேலும் டல்லடிக்க வைத்துள்ளது. 

இந்நிலையில்தான் அழகிரியிடம் ‘எம்.எல்.ஏ. ஆகுற வழியை பாருங்க’ என்று ஒரு உபாயத்தை சொல்லியிருக்கிறார் காந்தி! என்கிறார்கள் விபரமறிந்தோர். ஜெ., இறப்புக்கு பின் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றியை சுட்டிக்காட்டி, ‘சில வருடங்களுக்கு முன்னாடி உங்களுக்கு இருந்த அரசியல் அதிகாரத்தில் ஒரு பர்சன்டேஜ் கூட இவருக்கு இருந்ததில்லை. ஆனால் இன்னைக்கு புரட்சி பண்ணி இவரு ஜெயிச்சிருக்கார். 

அப்படின்னா உங்களாலே ஏன் முடியாது? திருவாரூர் தொகுதியில, உங்க அப்பா நின்ன இடத்துல சுயேட்சையா நில்லுங்க. நம்ம குடும்பமே பிரச்சாரத்துக்கு வந்து மக்கள்ட்ட நியாயம் கேட்போம். உங்க தம்பி, மாமாவோட (கருணாநிதி) எம்.எல்.ஏ. இடத்துக்கு வேற யாருக்கோதான் பிரச்சாரம் பண்ணப்போறார். ஆனா நாங்களோ மாமாவின் மகனான உங்களுக்கு வாக்கு கேட்கப்போறோம். மக்கள் நிச்சயம் உங்க மேலே அனுதாபப்படுவாங்க, நிச்சயம் ஜெயிப்பீங்க.” என்று ஆதங்கத்துடன் பேசி தூண்டியிருக்கிறாராம்.

அழகிரி மனைவியின் இந்த அதிரடி முடிவால் கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் என்ன சொல்வதென்றே தெரியாமல் குழப்பத்தில் உள்ளார்களாம்.