தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் உயிர்காக்க உடனடி ஊரடங்கு பேணப்பட வேண்டும் என நாகை சட்டமன்ற உறுப்பினரும்  மஜக பொதுச் செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். 
உலகை உலுக்கி வரும் கொரோனா தொற்றின் தாக்கம் இப்போது நம் நாட்டில் அதிகரித்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது.இதுவரை நாட்டில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,87,155 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,107 கடந்துள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக  கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக இருந்து வருகிறது, அதாவது நாள் ஒன்றுக்கு கிட்டதட்ட 9 ஆயிரம் முதல் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

இதேநிலை நீடித்தால் கடுமையான ஆபத்தில் நாடு சிக்கக்கூடும் என சுகாதார வல்லுநகர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 25,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டது முதல் நோய் தாக்கம் அதிகமாகியுள்ளது. குறிப்பாக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்தியாவில் இதன்  தாக்கம் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்போது தான் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. ஊரடங்கை பேணுவதிலும், வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிப்பதிலும் கொஞ்சம், கொஞ்சமாக அக்கறை இழக்கப்படுகிறதோ என்ற கவலை எல்லோருக்கும் உருவாகிவருகிறது. 

ஒருவரையொருவர் சுய கட்டுப்பாடுகளின் மூலம்   காப்பாற்றிக் கொள்ள கூடிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதே நிதர்சனமான உண்மையாகும். எனவே பொதுமக்கள் அனைவரும்  கூடுதல் பொறுப்புணர்வு காட்ட வேண்டிய தருணம் இது என்பதை வலியுறுத்துகிறோம். தமிழக அரசு இவ்விஷயத்தில் மனித உயிர்களை பாதுகாக்கும் வகையில் , கொரோனா சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் குறைந்தது ஒரு வாரத்திற்கு முழுமையான ஊரடங்கை அமல்படுததுவது குறித்து யோசிக்க வேண்டும். அப்படி அறிவிப்பதற்கு முன்பாக 48 மணி நேர அவகாசத்தை மக்களுக்கு வழங்கிட வேண்டும் எனவும், அப்பகுதிகளில் வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கும்  உதவிட வேண்டும் எனவும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்  கொள்கிறோம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.