தீவிர கொரோனா பரவலிலும், இடைவிடா தீவிர பணியிலும் எதிரணியினர் என்றாலும், ஒவ்வாரு உயிரும் அரசிற்கு முக்கியம் எனக்கருதி திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகனை மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்து நலம் விசாரித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கடந்த 2ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் விரைவில் குணமடைந்து பூரண நலம்பெற இறைவனை பிரார்த்தனை செய்வதாக தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  சிகிச்சை பெற்று வரும் அன்பழகனின் உடல்நலம் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார். 

 

இந்நிலையில் தீவிரமாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆலோசனை கூட்டம், ஆய்வு பணிகள், திட்டமிடல் ஆகிய வேலை பளுவுக்கு இடையே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், குரோம்பேட்டையில் உள்ள ரிலே மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். 

ஜெ.அன்பழகனை பார்த்துவிட்டு திரும்பியபோது மாவட்ட பிரதிநிதியும், அன்பழகனின் சகோதரர் ஜெ.ஜானகிராமன், மகன் ராஜா அன்பழகன் ஆகியோரை சந்தித்து, ‘தைரியமா இருங்க... சரியாகிடும்’ என ஆறுதல் படுத்தினார். அப்போது அன்பழகனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்.