செந்தில் பாலாஜி தி.மு.க.வில் சேர்ந்தாலும் சேர்ந்தார், அவரை வகைதொகை இல்லாமல் வெச்சுதான் செய்து கொண்டிருக்கிறார் அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர். இருவருக்கும் இருந்த பழைய பகைகளை மனதில் வைத்து, இப்போது செந்திலை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் செருகியெடுக்கிறார் நக்கல், நய்யாண்டி மற்றும் குதர்க்கமான வார்த்தைகளில்! என்று புலம்பிக் கொட்டுகிறது செ.பா.டீம். 

இப்போது அப்படி என்னதான் பேசிவிட்டாராம் அமைச்சர்?... ”கருணாநிதியை, அவரது சொந்தப்பெயரான தட்சிணாமூர்த்தி என்று அழைத்து குத்திக் காட்டினார் செந்தில்பாலாஜி. அதற்கு ‘பஸ் டிக்கெட் மெஷின் வாங்கியதில் ஊழல் செய்த பாலாஜி’ என்று பதிலுக்கு கிண்டலடித்தார் ஸ்டாலின். இப்பேர்ப்பட்ட இருவரும் இப்போது இணைந்திருக்கிறார்கள். ஹைய்யோ! 

தி.மு.க.வில் இணைந்த நாளிலேயே அதன் தலைவர் ஸ்டாலினை வகையாக ஏமாற்றி மிளகாய் அரைத்துவிட்டார் செந்தில். அந்த கூத்து தெரியுமா?... அதாவது, தன்னுடன் இருநூறு வாகனங்களில் பல ஆயிரக்கணக்கான அ.ம.மு.க. மற்றும் நபர்கள் அறிவாலயம் வந்து தி.மு.க.வில் இணைந்ததாக செந்தில்பாலாஜி கணக்கு காட்டினார். அது பச்சைப் பொய். அவரோடு சென்றது வெறும் ஆறு பேர்தான். கரூர் நகர அ.ம.மு.க. செயலாளர் கோல்டு ஸ்பாட் ராஜா, கோயம்பள்ளி பாஸ்கர், தாந்தோணி ராமலிங்கம். இவர்கள் போக இன்னும் மூன்று பேர். அவ்வளவே.  மீதி எல்லோருமே காசு கொடுத்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள்தான். 

இந்த ஏமாற்று வேலையை எப்படி செய்தார் தெரியுமா?...அரவக்குறிச்சி தொகுதியில் ஒரு ரேஷன் கார்டுக்கு ஒரு குக்கர் கொடுப்பதாக சொல்லி சில வாரங்களாக வீடு வீடாகச் சென்று போன் நம்பருடன் லிஸ்ட் எடுக்க வைத்திருக்கிறார். அந்த லிஸ்டை அப்படியே ஃபைல் போட்டு ஸ்டாலினிடம் கொடுத்து, தன்னோடு தி.மு.க.வில் இணைந்தவர்கள்! என்று கள்ளக்கணக்கு காட்டிவிட்டார். இது போக வாகனங்களில் வந்த நபர்களுக்கெல்லாம் தலைக்கு இவ்வளவு, சாப்பாடு, பயணம் இலவசம் என்று கணக்குப்போட்டு அழைத்துச் சென்றுவிட்டு வந்து இறக்கிவிட்டுள்ளார். இப்படித்தான் முதல் நாளிலேயே ஸ்டாலினை முழுதாய் ஏமாற்றியிருக்கிறார். 

செந்தில்பாலாஜி கட்சி மாறுவது இதோடு ஐந்தாவது முறை. ம.தி.மு.க.விலிருந்து தி.மு.க. போய், அங்கிருந்து அ.தி.மு.க. வந்து வகையாக வாழ்ந்து வளர்ச்சியடைந்துவிட்டு பிறகு அ.ம.மு.க.வுக்கு சென்று அந்த கட்சியில் பதினேழு எம்.எல்.ஏ.க்களை நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்திவிட்டு இப்போது இவர் தி.மு.க.வில் மீண்டும் ஐக்கியமாகிவிட்டார். எழுதி வெச்சுக்குங்க, இங்கேயும் இவர் நிலைக்கமாட்டார்.” என்று வெளுத்திருக்கிறார். நம்ம விசயபாஸ்கரா இது! ப்பாரு இந்த புள்ளைக்குள்ளேயும் இம்பூட்டு பேச்சுத் தெறம இருக்குதே! என்று அதிசயிக்கிறார்கள் அ.தி.மு.க.வின் சீனியர் பாட்டிகள்.