நாலைந்து நாட்களாய் தினகரனை மன உளைச்சலில் திணறச்செய்த செந்தில்பாலாஜி, தி.மு.க.வில் செட்டிலாகிவிட்டார். ‘போனவரை நினைத்து புண்ணியம் என்ன?’ என்று தினாவும் அடுத்த வேலையைப் பார்க்க போயிவிட்டார். ஆனால் கரூர் மாவட்ட அ.தி.மு.க.வுக்குதான் தூக்கம் போய்விட்டது. 

காரணம், என்னதான் தினகரனின் நிழலில் நின்றாலும் கூட அ.தி.மு.க. வாக்கு வங்கியை டேமேஜ் செய்யாமல்தான் இருந்தார் செ.பா. ஆனால் இப்போது தி.மு.க.வுக்கு அவர் தாவிவிட்ட நிலையில் எங்கே தங்களின் வாக்கு வங்கிக்கு சூப் வைத்துவிடுவாரோ? என்றுதான் அலறிக் கொண்டிருக்கிறார்கள் கரூர் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரும், அதே மாவட்டத்தை சேர்ந்தவரான மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும். ஆனாலும் பதற்றத்தை வெளியேக் காட்டிக் கொள்ளாமல், இருவரும் செந்திலை வெச்சு செய்கிறார்கள் வாய்ப்பு கிட்டும் போதெல்லாம்.

 

இதில் விஜயபாஸ்கர்தான் ஓவர் பாய்ச்சல் காட்டுகிறார் செ.பா. மீது. காரணம்? அந்தளவுக்கு செந்திலால் கடந்த சில வருடங்களாய் பிரிச்சு மேயப்பட்டதுடன், ஓவர் நக்கல் நய்யாண்டி சாபங்களுக்கும் ஆளானவர். சமீபத்தில் ஒரு பேட்டியில் செந்தில்பாலாஜியை விஜயபாஸ்கர் வெளுத்தெடுத்ததன் ஹைலைட் விஷயங்களானவ...  

* தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையான ராமேஸ்வரன்பட்டியில் பிறந்த செந்தில்பாலாஜிக்கு எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர், முக்கிய துறையின் அமைச்சர்! என்று பதவிகளை அள்ளித் தந்து அட்ரஸ் கொடுத்தவர் அம்மா. அந்த நன்றியை மறந்து, ‘நம் நிரந்தர எதிரி’ என்று அம்மாவால் இறுதிவரை அடையாளம் காட்டப்பட்ட தி.மு.க.வில் அவர் இணைந்தது அம்மாவுக்கு செந்தில் செய்த பச்சை துரோகம். 

* தி.மு.க. போட்ட ‘சொத்துக் குவிப்பு வழக்கு’ எனும் பொய் வழக்கால்தானே அம்மா கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இல்லையென்றால் இன்னும் பத்து ஆண்டுகள் உயிரோடு இருந்திருப்பாரே. அவரை சாய்த்த கூட்டத்தோடு நட்பு காட்டிய செந்தில்பாலாஜியை காலம் மன்னிக்காது. 

* அம்மா அப்பல்லோவில் இருந்த போது செந்தில்பாலாஜி அக்னிச்சட்டி எடுத்ததும், ஐந்தாயிரம் பேருக்கு மொட்டை அடித்ததும், அங்கப்பிரதட்சணம் செய்ததும் வெறும் நாடகம்தான், நடிப்புதான்! என்று இப்போது விளங்கிவிட்டது உலகத்துக்கு. 

* செந்தில்பாலாஜி தி.மு.க.வுக்கு தாவிய வெறும் இரண்டே நாட்களில் கரூர் மாவட்ட அ.ம.மு.க. அப்படியே காலியாகி எங்கள் அ.தி.மு.க.வில் வந்து இணைந்து கொண்டிருக்கிறது. தினகரன் மற்றும் செந்திலை நல்லவர்கள் என்று நினைத்துப் போனவர்கள் இப்போது தெளிந்து மீண்டும் தாய்கழகம் திரும்புகிறார்கள். ஆக இங்கே தினகரனின் அ.ம.மு.க. கூடாரமும் காலி, செந்தில்பாலாஜி எனும் பச்சோந்தி நுழைந்த வகையில் ஸ்டாலினின் தி.மு.க.வும் காலி. 

* வாழ்க்கை தந்த வள்ளலான அ.தி.மு.க.வுக்கு தொடர்ந்து  துரோகம் செய்திருக்கும் செந்தில்பாலாஜியை, அம்மாவின் ஆவி ச்சும்மா விடாது. புரட்டிப் புரட்டி  அடிக்கும். ஏண்டா துரோகம் செய்தோம்!? என்று கதறி அழுவார் செந்தில். அதை நாங்களும் பார்க்கத்தான் போகிறோம். என்று பொங்கியிருக்கிறார்.