குட்கா ஊழல் வழக்கு குறித்து, சிபிஐ  விசாரணை நடத்தி வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு  அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனிடம், சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, முறைகேடு நடந்த காலத்தில், வணிக வரித்துறை அமைச்சராக இருந்த ரமணா, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரிடமும், விசாரணை நடத்தப்பட்டது


இதில், அமைச்சர் விஜயபாஸ்கரிடம், இரண்டு நாட்களாக, பல மணி நேரம் விசாரணை நடந்தது. விசாரணையின் தொடர்ச்சியாக, சிலர் கைது செய்யப்படலாம் என்ற தகவல், வெளியாகி உள்ளது. சிபிஐ விசாரணையில் அமைச்சர் சிக்கியது, அரசுக்கும், ஆளும் கட்சிக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 'அவரைநீக்க வேண்டும்' என, சில அமைச்சர்கள், எடப்பாடியிடம்  வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமியை, அவரது வீட்டில், அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து பேசினார். அப்போது, விசாரணை குறித்த தகவல்களை, அவர் விளக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குட்கா ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள, அமைச்சர், விஜயபாஸ்கரின் உதவியாளர் மற்றும் நண்பர் வீடுகளில், சிபிஐ அதிகாரிகள், நேற்று அதிரடி சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

அதேபோல, விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பரான, வேலு கார்த்தி என்பவரின், தஞ்சாவூர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. மூன்று வீடுகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடத்திய சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரிகிறது.

மேலும்  ஆர்.கே.நகர் தொகுதியில் பணம்பட்டுவாடா செய்தது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் வந்தபோது, இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் கடுமையாக சாடினர். இதனிடையே ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன்பும் அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்கிறார்.

இப்படி தொடர்ந்து சிபிஐ, உயர்நீதிமன்றம் என வழக்குகளில் விஜய பாஸ்கர் சிக்கித் தவிப்பதால் அவரை சிபிஐ எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இன்று அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.