Asianet News TamilAsianet News Tamil

வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடு !! அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும் !! ஸ்டாலின் அதிரடி அறிக்கை !!

சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பொது  மக்கள் குடிநீருக்காக அல்லாடுவதற்கு காரணமான அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதவி விலக வேண்டும் அல்லது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரை பதவியில் ஈருந்து நீக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Minister velumani will resign for water scarcity
Author
Chennai, First Published Jun 14, 2019, 9:02 PM IST

இது தொடாபாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் நிலவும் குடிநீர் பஞ்சத்தைப் போக்க நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்” என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு கேள்வி எழுப்பியும், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் திருந்தியபாடில்லை என தெரிவித்துள்ளார்.

Minister velumani will resign for water scarcity

நாள்தோறும் குடிநீர் தேடி அலைந்து அல்லல்பட்டுத்  திண்டாடும் மக்கள் பற்றித் துளியும் கவலைப்படாமல்- கட்சிக் கூட்டங்களையும் நடத்திக் கொண்டும், பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டும்- மக்கள் எக்கேடு கெட்டால் நமக்கு என்ன என்று அலட்சியமாகவும் ஆணவத்துடனும்  இருக்கும் அதிமுக ஆட்சியாளர்களுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னைக்கு எவ்வளவு குடிநீர் தேவை என்பதைக் கூடத் தெளிவாகத்  தெரிந்து கொள்ளாமல் “தினமும் 7000 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்து கொண்டு வருகிறோம்” என்று இந்தத் துறைக்கு அமைச்சராக இருப்பவரே பத்திரிக்கையாளர் சந்திப்பில் உளறிக் கொட்டி வருகிறார்.

Minister velumani will resign for water scarcity

குடியிருப்பு வாசிகள் “ஆன்லைனில் புக்கிங்” செய்யும் டேங்கர் லாரி குடிநீருக்காக 15 முதல் 18 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏன் வந்துள்ளது? தெருத்தெருவாக  மக்கள் குடங்களை தூக்கிக் கொண்டு சைக்கிளிலும், ரிக்‌ஷாக்களிலும் தொலை தூரம் சென்று ஒரு குடம் தண்ணீர் சேகரிக்கத்  தள்ளப்பட்டுள்ளது ஏன்? 

மெட்ரோ வாட்டர் குழாய்களில் வரும் குடிநீரும் பல இடங்களில் துர் நாற்றம் வீசுவது ஏன்? தண்ணீர் இல்லாமல் பல உணவகங்கள் மூடப்படுவது ஏன்? தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாமல் ஐ டி கம்பெனிகள் தங்களது ஊழியர்களை இல்லத்தில் இருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ள அவல நிலைமை சென்னைக்கு வந்தது ஏன்? இதற்கெல்லாம் “ஊழலில்” நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் உரிய பதில் இல்லை.

Minister velumani will resign for water scarcity

சென்னைப் பெருநகர் குடிநீர் வாரியத்திலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திலும் “டெண்டர்களில்” கமிஷன் வசூல் செய்வதில் காட்டும் அக்கறையில் ஒரு துளியை உள்ளாட்சித் துறை அமைச்சர், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தில் காட்டியிருந்தால்- சென்னைக்கான அந்த இரு திட்டங்களை நான்குவருடத்தில் நிறைவேற்றியிருந்தால், இன்று சென்னை மக்கள் குடிநீர்ப் பஞ்சத்தில் துடிக்க வேண்டிய நிலை- துயரப்பட வேண்டிய நிலை வந்திருக்காது.

ஆகவே சென்னை மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உள்ளாட்சித்துறை அமைச்சரின் படு தோல்விதான், இன்று சென்னை மக்கள் மட்டுமின்றி - தமிழ்நாடு மக்களும் குடிநீருக்கு அலையும் கொடுமைக்கு  முழுக்காரணம்.

Minister velumani will resign for water scarcity

ஆகவே இந்தத் தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது அமைச்சர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். 

அப்படி அவர் ராஜினாமா செய்யத் தவறினால், முதலமைச்சர் உடனடியாக, இன்றைய குடிநீர்ப் பஞ்சத்திற்கும் கோடானு கோடி மக்களின் துன்பத்திற்கும் வித்திட்ட அவரை, அமைச்சர் பதவியிலிருந்து தயவு தாட்சண்யம் பார்க்காமல் “டிஸ்மிஸ்” செய்ய வேண்டும்  என ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்

Follow Us:
Download App:
  • android
  • ios