கொரோனாவை எதிர்த்து போராடி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.25 லட்சத்தை வழங்கிய நடிகர் லாரன்ஸுக்கு அமைச்சர் எஸ்பி வேலுமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்காக, பிரதமர் நிவாரண நிதிக்கும், அந்தந்த மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் பல்வேறு பிரபலங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் நிதியை வழங்கி வருகின்றன.

அந்த வகையில் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில், நடிகர் ராகவா லாரன்ஸ் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும் வழங்கினார். மேலும், நடனக் கலைஞர் சங்கத்திற்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம், ஏழை மக்களுக்கு ரூ.75 லட்சமும் வழங்கினார்.

இதனிடையே, கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வரும் தூய்மை பணியாளர்களுக்கு ரூ. 25 லட்சம் வழங்குவதாக நடிகர் லாரன்ஸ் அறிவித்திருந்தார். அதன்படி, ஃபைவ் ஸ்டார் குரூப் கதிரேசன் தயாரிக்கும் படத்தில் நடிப்பதற்காக வாங்கிய முன்தொகையில், ரூ. 25 லட்சத்தை சொன்னபடி, தூய்மை பணியாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தினார். அவரது இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணியும் அவருக்கு பாராட்டு தெரிவித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,”தனது அடுத்த படத்தின் சம்பளத்திலிருந்து அல்லும் பகலும் அயராது #COVID19-ஐ எதிர்த்து களத்தில் போரிட்டுக் கொண்டிருக்கும் 3,385 தூய்மைப் பணியாளர்களின் வங்கி கணக்குகளில் ரூ. 25 லட்சத்தை செலுத்தியுள்ள சகோதரர் திரு. லாரன்ஸ் அவர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுகள்,” எனத் தெரிவித்துள்ளார்.