Minister Velumani in Australia!

வெளிநாடுகளுக்குச் செல்வதைவிட மக்களுக்கு சேவை செய்வதையே விரும்புவதாகக் கூறிய உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, இன்று தனது குடும்பத்தாருடன் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். தொடர் மழையால், சென்னை நகரின் பல இடங்கள் இன்னமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மழை மட்டும் நின்று விட்ட நிலையில், அவர் ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.

சென்னையில் நேற்று முன்தினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மழை தொடர்பான ஆய்வுகளை நடத்தினார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அவர் ஆய்வு செய்தார். இதேபோல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு நடத்தினர். 

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் விரைவில் அகற்றப்படும் என்று அவர்கள் உறுதி கூறினர்.

வடமேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தாற்காலிகமாக கடந்த இரு தினங்களாக மழை விட்டுள்ளது.இருப்பினும் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பெய்த மழையில், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் மேலும் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நகரின் பல பகுதிகளில் இன்னமும் வெள்ளம் வடியவில்லை. இந்தச் சூழலில், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, தன் குடும்பத்தாருடன் ஆஸ்திரேலியா பயணம் செல்வதாக தகவல் வெளியானது. ஆனால், சென்னை நகரம் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் நிலையில், அமைச்சர் வேலுமணி வெளிநாடு பயணமா? என கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனை அடுத்து ஆஸ்திரேலியா பயணத்தை ஒத்தி வைப்பதாகக் கூறினார் வேலுமணி. இது குறித்து பேசிய அமைச்சர் வேலுமணி, வெளிநாடுகளுக்கு செல்வதைவிட மக்களுக்கு சேவை செய்வதையே விரும்புகிறேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், அமைச்சர் வேலுமணி ஆஸ்திரேலியா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் வேலுமணியுடன் நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் ஹர்மந்தர்சிங் ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகளும் ஆஸ்திரேலிய பயணம் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.