தற்போது அதே அரசு ஊழியர்களும் , ஆசிரியர்களும் தான்  வாக்குச் சாவடிகளில் பணி புரியப் போவதால் அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அமைச்சர் தங்கமணி அதிமுகவினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டத்தை பல்வேறு வகையில் அடக்கியதால், ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும், அதிமுக அரசு மீது பயங்கர கடுப்பில் உள்ளனர் , வரும் தேர்தலில் தங்களின் வலிமையைக் காட்டி ஆளும் அரசை தோற்கடிப்போம் என ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் பகிரங்கமாக பேசிக் கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நாமக்கல்லில் அதிமுக சார்பில்  மக்களவைக்கு போட்டியிடும்  வேட்பாளர் காளியப்பனை அமைச்சர் தங்கமணி பொதுக் கூட்டம் ஒன்றில் அறிமுகம் செய்து வைத்தார்.  இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் தமிழக வாக்குச் சாவடிகளில் அரசு ஊழியர்களும் , ஆசிரியர்களும்தான் பணியில் இருப்பார்கள்.

ஏற்கனவே அவர்கள்  நம் மீது கடும் கோபத்தில் உள்ளனர். ஆகவே நமது வாக்குச் சாவடி முகவர்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க  வேண்டும் என தெரிவித்தார். அவர்களால் எந்த முறைகேடும் நடக்காமல் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தங்கமணி கேட்டுக் கொண்டுள்ளார்.