ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்துவரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆஜரான முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவிடம் சசிகலா தரப்பில் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராம மோகன ராவ், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, காவிரி விவகாரம் குறித்து காவிரி விவகாரம் குறித்து விவாதித்ததாகவும் அந்த கூட்டத்தில் அப்போது அமைச்சர்களாக இருந்த ஓபிஎஸ், ஈபிஎஸ், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோரும் கலந்துகொண்டதாக விசாரணையில் தெரிவித்ததாக ராம மோகன ராவ் கூறினார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது நான் நாமக்கல்லிலும், அமைச்சர் வேலுமணி திருவனந்தபுரத்திலும் இருந்தார். யாரையோ திருப்தி படுத்துவதற்காக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் முன்னாள் தலைமை செயலர் ராமமோகன ராவ் எங்கள் மீது புகார் கூறியுள்ளார். ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. உயரதிகாரி பொறுப்பில் இருக்கும் ஒருவர் பொய்யான தகவல்களை கூறுவதை ஏற்க முடியாது. ஜெயலலிதா மறைந்தவுடன் இதனை அப்போதே ஏன் அவர் சொல்லவில்லை என தங்கமணி கேள்விஎழுப்பினார்.