சீட் கிடைக்கலையா ! கவலைப்படாதீங்க.. உங்களுக்கு அரசு பொறுப்பு தரேன்.. அமைச்சர் செந்தில் பாலாஜி 'சர்ச்சை' பேச்சு
‘தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் அதிருப்தியில் இருப்பார்கள். அவர்களுக்கு தேர்தல் முடிந்ததும் அரசு பொறுப்புகள் வழங்கப்படும். யாரும் கவலைப்படக்கூடாது’ என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
கோவை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், குனியமுத்துாரில் நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மொத்தம் 811 இடங்கள் இருக்கின்றன. இவற்றில் போட்டியிட வாய்ப்பு கோரி தி.மு.க.,வில் மட்டுமே 3600 பேர் விருப்ப மனு கொடுத்தனர்.
கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்தி, அவர்களுக்கும் ஒதுக்கீடு செய்திருக்கிறோம்.வாய்ப்பு கிடைத்த 811 பேருக்கு மட்டுமே தகுதி என்று அர்த்தமில்லை. அனைவருக்கும் தகுதி இருக்கிறது.இடமில்லை.எனவே வாய்ப்பு கிடைத்தவர்கள், வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு சால்வை அணிவித்து அவர்களை அரவணைத்து செல்லுங்கள். வருத்தத்தில் இருப்பர்களை சரி செய்ய வேண்டும். தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் அதிருப்தியில் இருப்பார்கள்.
அவர்களுக்கு தேர்தல் முடிந்ததும் அரசு பொறுப்புகள் வழங்கப்படும். யாரும் கவலைப்படக்கூடாது.கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு கொடுத்த வார்டுகளில் திமுகவினர் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் வார்டு மக்களின் தேவையை முழுவதும் அறிந்து அவர்களுக்கு வாக்குறுதி அளிக்க வேண்டும்.மாவட்டத்தில் 2300 ஓட்டுச்சாவடிகள் இருக்கின்றன.
ஒரு ஓட்டுச்சாவடிக்கு ஒருவர் துணிச்சல்காரராக இருந்தால் போதும். எது வந்தாலும் பார்த்துக்கொள்ள முடியும் என்று தைரியத்துடன் நம்பிக்கையுடன் களத்தில் இருந்தால் நாம் அனைத்து வார்டிலும் நிச்சயம் ஜெயிக்க முடியும்’ என்று பேசினார். அமைச்சரின் இந்த பேச்சு ‘சர்ச்சையை’ கிளப்பி இருக்கிறது.