மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது ஏன்..? இலவச மின்சாரம் ரத்து செய்ய திட்டமா.? செந்தில் பாலாஜி விளக்கம்
ஒரே ஆதார் எண்ணை வைத்து 10 மின் கட்டண இணைப்பிலும் இணைக்கலாம் என கூறியவர், 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாய மின் இணைப்புக்கான மானியங்கள் ஆதார் இணைப்பால் பாதிக்கப்படாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஆதார் இணைப்பு ஏன்.?
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை கட்டாயம் இணைக்க தமிழக மின் வாரியம் உத்தரவிட்டது. இது தமிழக மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி கேள்விகளை எழுப்பியிருந்தனர். அதில் சில வீடுகள் இறந்தவர்களின் பெயர்களில் உள்ளதால், இறந்தவர்களுக்கு ஆதார் எண் இல்லாத சூழ்நிலையில், அவர்களுடைய வாரிசுதாரர்களுக்குள் ஆதார் எண்ணை இணைப்பதில் சிக்கலான சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் சில வீட்டின் உரிமையாளர்கள் வாடகைதாரர்களின் ஆதார் எண்ணை இணைக்க அனுமதிப்பதில்லையென்றும், சில வாடகைதார்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க விரும்பவில்லையெனவும் கூறப்படுவதாகவும் கூறியிருந்தனர். இதே போல ஆதார் எண்ணுடனான மின் இணைப்பு பணி முடிந்தவுடன், ஒருவருக்கு ஒரு வீட்டிற்கு மட்டும்தான் மின்சார மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிக்குமோ என்ற அச்சமும் தமிழக மக்கள் மத்தியில் நிலவுவதாக எதிர்கட்சிகள் தெரிவித்து இருந்தன. இதற்க்கு தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தனர்.
இலவச மின்சாரம் ரத்தா.?
இந்தநிலையில், தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று முதல் சிறப்பு முகாம்கள் நடைப்பெற்று வருகிறது. சென்னை மயிலாப்பூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு முகாமை நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். இன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைப்பெற உள்ளதாகவும் இதுவரை 15 லட்சம் பேர் தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக கூறினார். ஒரே ஆதார் எண்ணை வைத்து 10 மின் கட்டண இணைப்பிலும் இணைக்கலாம் என கூறியவர், 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாய மின் இணைப்புக்கான மானியங்கள் ஆதார் இணைப்பால் பாதிக்கப்படாது என தெரிவித்தார். மேலும் ஒருவர் 5 மின் இணைப்பு வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் எனவும் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.
மானியங்கள் ரத்து செய்ய திட்டமா.?
ஆதாரை இணைத்தால் மானியங்கள் ரத்தாகும் என்று வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர், அந்த தகவலில் உண்மையில்லையென கூறினார். அரசு மானியம் வழங்கக்கூடிய அனைத்து திட்டங்களும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார். மின்சார வாரியத்தில் லீக்கேஜை போன்ற முறைகேடுகளை கண்டுபிடிக்கவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எனவே எந்தவித அச்சமும் ஆதார் எண்ணை இணைப்பதில் தேவையில்லையென கூறினார்.
இதையும் படியுங்கள்
அன்று எதிர்ப்பு..! இன்று கட்டாயமா..? மக்களை துன்புறுத்தும் திமுக அரசு..! இறங்கி அடிக்கும் ஓபிஎஸ்