காலாவதியானது ஆன்லைன் ரம்மி தடை மசோதா.! ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் மீண்டும் அதிகரிக்கும் ஆன்லைன் சூதாட்டம்..?
ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத காரணத்தால், மீண்டும் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் சூதாட்டம்
ஆன் லைன் சூதாட்டத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு தங்களது சொத்துகளை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து 30க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனையடுத்து தமிழக அரசு சார்பாக அவசர சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததன் காரணமாக தமிழக ஒரு அமைத்து ஆன் லைன் விளையாட்டுகள் தொடர்பாக ஆய்வு செய்து சட்டம் இயற்றியது. இந்த அவசர சட்டத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவிஅன்றைய தினமே பரிசீலித்து உடனடியாக ஒப்புதல் அளித்தார். இது ஆன்லைன் சூதாட்ட எதிர்ப்பு ஆர்வலர்கள், பொதுமக்கள் மத்தியில் நிம்மதிப்பெருமூச்சு விட வைத்தது.
அவசர சட்டம் இயற்றிய அரசு
இந்த நிலையில், தமிழக அரசு, அந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாக நிரந்தர சட்டம் கொண்டு வர முடிவு செய்தது. அதன்படி, 'தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா 2022'-ஐ சட்டசபையில் தாக்கல் செய்து, நிறைவேற்றி, கவர்னரின் ஒப்புதலுக்காக கடந்த மாதம் 28-ந்தேதி தமிழக அரசு அனுப்பி வைத்தது. இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் உடனடி ஒப்புதல் தந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்பதல் அளிக்காத நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதா தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி, விளக்கங்கள் கேட்டு தமிழக அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி. கடிதம் எழுதினார். கடந்த 24-ந்தேதி காலை 11 மணியளவில் கவர்னர் மாளிகையில் இருந்து கடிதம் கிடைக்கப்பெற்ற நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் தமிழக அரசு விளக்க கடிதத்தை அனுப்பி வைத்தது.
மீண்டும் ஆன்லைன் சூதாட்டம்
இந்தநிலையில், தமிழக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டம் கடந்த மாதம் 1-ந்தேதி கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் சட்டசபை கூடிய நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்டம் தானாகவே காலாவதி ஆகிவிடும். இந்தநிலையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னர், தமிழக சட்டசபை கடந்த மாதம் 17-ந் தேதி கூடியது. நேற்றுடன் 6 வாரங்கள் முடிந்துவிட்டது. எனவே ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டம் நேற்றுடன் காலாவதியாகி உள்ளது. இதன் காரணமாக ஆன்லைன் சூதாட்டம் முழுவீச்சில் மீண்டும் நடைபெறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்
இங்கே பாருங்க.. தமிழகத்தில் இனி ஒரு உயிர் போனாலும் ஆளுநரே பொறுப்பு.. பொங்கும் அன்புமணி ராமதாஸ்..!