பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் காஞ்சிபுரத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று
வழிபாடு செய்தார். பின்னர் காஞ்சி சங்கர மடத்திற்கு சென்று அங்கு சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.அதன்பின் சந்தித்த அமைச்சர் வரும் கல்வியாண்டில் அதாவது வரும் ஜனவரி மாதம் முதலே அரசு பள்ளிகளில் எல்கேஜி யூகேஜி வகுப்புகள் தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கையும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து வசதிகளையும். அதாவது கல்வியில் மேம்பாடு, மறுசீரமைப்பு, புதிய பாடத்திட்டம், பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு, மாணவர்களுக்கு புதிய சீருடை, ஆசிரியர்களும் சரியான நேரத்திற்கு வேலைக்கு வரவேண்டும் என அவர்களுக்கும் பயோமெட்ரிக் முறை, நீட் தேர்வுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி வகுப்புகள், மாணவர்களின் ஆங்கில கல்வி முறையை மேம்படுத்த சிறப்பு ஆங்கில பேராசிரியர்களை வெளிநாடுகளிலிருந்து வரவழைத்தது. இது போன்ற பல்வேறு கட்ட அதிரடி நடவடிக்கையை மேற்கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் வரும் ஜனவரி மாதம் முதல் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளியிலும் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் தொடங்க உள்ளது என  தெரிவித்துள்ளார்.

முன்பு இருந்ததை விட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொண்டு வரும் பல புதிய நடவடிக்கைகள் பல புதிய திட்டங்கள் மூலம் தற்போதைய நிலவரப்படி பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.