Asianet News TamilAsianet News Tamil

செங்கோட்டையனுக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு? முதல்வரை உசுப்பும் அமைச்சர்கள்

தமிழக அமைச்சர்களை சில வகைகளாக பிரிக்கிறார்கள் குறும்புக்கார விமர்சகர்கள். கெத்து புள்ளி! கிராக்கி புள்ளி! காமெடி புள்ளி! என்று. இதில்  ஃபர்ஸ்ட் குவாலிட்டியான ’கெத்து புள்ளி’ லிஸ்டில் அடங்குபவர்களில் முக்கியமான முதல் நபர் பள்ளிக்கல்வி துறை அமைச்சரான கே.ஏ.செங்கோட்டையன்.

Minister Sengottaiyan Top
Author
Chennai, First Published Nov 12, 2018, 4:27 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தமிழக அமைச்சர்களுக்கு கண்டன அறிக்கை கொடுப்பதற்கே நேரம் போதவில்லை என்பதை உலகம் அறியும். ஸ்டாலின், தினகரன், அரசர், கம்யூனிஸ்டுகள் என எதிர்கட்சிகள் மட்டுமில்லாது! கமல், விஜய், ரஜினி என்று சினிமா நட்சத்திரங்களுக்கும் தினமும் ஆவேச பதில் சொல்வதும், நாக்கை துருத்துவதுமாக நகர்ந்து கொண்டிருக்கிறது அவர்களின் வாழ்க்கை. இதுவும் ஊருக்கே தெரியும். 

ஆனால் அமைச்சரவைக்கு உள்ளேயே ஒரு ஈகோ யுத்தம் நடப்பது உங்களுக்கு தெரியுமா? அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதைத்தான் டீல் செய்கிறோம் இங்கே. தமிழக அமைச்சர்களை சில வகைகளாக பிரிக்கிறார்கள் குறும்புக்கார விமர்சகர்கள். கெத்து புள்ளி! கிராக்கி புள்ளி! காமெடி புள்ளி! என்று. இதில்  ஃபர்ஸ்ட் குவாலிட்டியான ’கெத்து புள்ளி’ லிஸ்டில் அடங்குபவர்களில் முக்கியமான முதல் நபர் பள்ளிக்கல்வி துறை அமைச்சரான கே.ஏ.செங்கோட்டையன். இரண்டாவது குரூப்பான ‘கிராக்கி பார்ட்டி’யில் வருபவர்கள் யாரிடம் எதையும் பேசமாட்டார்கள், தான் உண்டு தன் அரசியல் உண்டு என்று உலா வருபவர்கள். மூன்றாவது கோஷ்டியான ‘காமெடி புள்ளி’யில் யார் யார் வருவார்கள், அவர்களின் பணி என்ன என்பதெல்லாம் தாங்களே அறியாததில்லை. அதனால் அதை டீல் செய்ய வேண்டாம். 

இப்போது பிரச்னை என்னவென்றால், எல்லா அமைச்சர்களுக்கும் ஒரேயொரு அமைச்சர் மீதுதான் ஈகோ கண். அது செங்கோட்டையன் தான். பொழுது விடிந்து பொழுது போனால் ஒரு புது அறிவிப்பு, மறுநாள் காலையில் அடுத்த லெவல் திட்டம் என்று மனிதர் டாப் கியரையும் தாண்டி தன் துறை வண்டியை செலுத்திக் கொண்டிருக்கிறார். அதிலும் நேற்று வேலூரில் பேசியவர், ‘தமிழகத்தில் நானூற்று எழுபத்தியோறு அரசுப்பள்ளிகளில் தலா 20 லட்சம் செலவில் விண்வெளி ஆராய்ச்சிக் கூடம் துவங்கப்பட இருக்கிறது.’ என்று கெத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். 

இது டெல்லி வரை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஜெயலலிதா இருந்த போது கூட இப்படியான அடேங்கப்பா திட்டங்கள் அறிவிக்கப்பட்டதில்லை. ஒருவேளை அறிவிக்கப்பட்டாலும் அவையெல்லாம் ஜெயலலிதாவின் கையில் இருக்கும் துறைகளில்தான் நடைமுறைப்படுத்தப்படுமே தவிர பிற துறைகளில் இருக்காது. பிற துறைகளில் செயல்படுத்தப்படும் சாதாரண திட்டங்கள் கூட ஜெயலலிதாவின் வாயால்தான் அறிவிக்கப்பட்டு, அவரது கைகளால்தான் திறந்து வைக்கவும்படும். இதற்காக அந்த திட்டம் உருவாக்கப்பட்டு முடிக்கப்பட்டாலும் கூட பல மாதங்கள் காத்திருந்து, அவர் அந்த ஊருக்கு வரும்போதுதான் திறக்கப்படும் அல்லது வேறு வழியில்லாமல் வீடியோகான்ஃபரன்ஸிங்கில் திறக்கப்படும் என்பதுதான் எழுதப்படாத சட்டம்.
 
இதையெல்லாம் ஜெயலலிதாவின் அமைச்சரவை சகாவாக பலவருடங்கள் இருந்து அனுபவப்பூர்வமாக தெரிந்து வைத்திருப்பவர்தான் செங்கோட்டையன். ஆனாலும் கூட ஜெ., மரணத்துக்குப் பின் எடப்பாடியாரின் அமைச்சரவையில் இடம் பிடித்தவர், தனது பள்ளிக் கல்வித்துறையின் முக்கிய மற்றும் அதிரடியான புது அறிவிப்புகளை தன் வாயால்தான் வெளியிடுகிறார். அதுமட்டுமல்ல, நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் தன் கைகளால்தான் திறந்து வைக்கிறார். 

முதல்வர் எடப்பாடியாரையோ அல்லது துணை முதல்வர் பன்னீர்செல்வத்தையோ தன் துறையின் முக்கிய அறிவிப்புகளை அறிவிக்கவோ, திறந்து வைக்கவோ சொல்லி அவர் சூழ்நிலைகளை உருவாக்குவதே இல்லை. எடப்பாடியாருக்கு இதெல்லாம் கண்ணிலும், கருத்திலும் பட்டாலும் கூட ‘சீனியர் மோஸ்ட்’ எனும் அடிப்படையில் செங்கோட்டையனை அவர் கண்டு கொள்வதில்லை.  ஆனால் செங்கோட்டையனின் இந்த தனி ராஜ்ஜியமானது பிற அமைச்சர்களுக்கு ஈகோவை கிளப்பியிருக்கிறது. 

தமிழ்நாட்டிலேயே மிக மிக சிறப்பாக செயல்படும் ஒரே துறை அது பள்ளிக் கல்வித்துறைதான்! என்று பத்திரிக்கை மற்றும் மீடியாவில் பேசப்படுவது அவர்களை எரிச்சலூட்டி இருக்கிறது. இதனால் செங்கோட்டையனுக்கு கடிவாளம் போடும்படி முதல்வரிடம் தொடர்ந்து வலியுறுத்தினார்கள். ஆனால் முதல்வர் செங்ஸ் விஷயத்தில் தலையிடுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். 

இந்நிலையில் சமீபத்தில் முதல்வரிடம் சில அமைச்சர்கள், “ஏனுங்ணா அவரை கண்டுக்க மாட்டேங்கிறீங்க? துறை ரீதியான விஷயங்களில் முன் அனுமதி, அழைப்பு அப்படின்னு உங்களுக்கான மரியாதை எதையும் அவர் தர்றதில்லை. ஆனா நீங்க அவரை கண்டிக்க மாட்டேங்கிறீங்க. அவருக்கென்ன கொம்பா முளைச்சிருக்குது? உடனே கூப்பிட்டு இது பத்தி நால் வார்த்தை நறுக்குன்னு கேளுங்க. அதென்ன தனி ராஜ்ஜியம் நடத்திட்டு இருக்கிறார்?” என்று பொங்கியிருக்கின்றனர். 

 ஆனாலும் எடப்பாடியாரோ அவர்களை சமாதானப்படுத்தி, “விடுங்க விடுங்க, அவரு அவர் ரூட்ல போயிட்டிருக்கார். ஆட்சி கரெக்டா போகுதா, நம்ம ஆட்சியில் துறைகள் நல்ல பெயரை மக்களிடம் வாங்குதா! அதுதான் முக்கியம்.” என்று அமைதிப்படுத்த முயன்றாராம். இதில் அமைச்சர்களுக்கு பெரும் கோபமும், மனவருத்தமுமாம். தன் உளவுப்படை மூலம் இவற்றை தெரிந்து கொண்ட செங்கோட்டையன் மர்மமாய் சிரித்துக் கொண்டிருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios