போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை காப்பாற்ற செங்கோட்டையன் போராடி வரும் நிலையில் எடுத்த முடிவில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உறுதியாக இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது முதலே செங்கோட்டையன் டென்சனாக இருந்து வருகிறார். பள்ளிக் கல்வித்துறை எந்த சர்ச்சையிலும் சிக்க கூடாது, மிஸ்டர் க்ளீன் மற்றும் மிஸ்டர் பெர்பெக்ட் எனும் இமேஜை எப்போதும் விட்டுவிடக்கூடாது என்று செங்கோட்டையன் மிகவும் பிடிவாதமாக இருந்து வந்தார். இந்த நிலையில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக செங்கோட்டையனுக்கு முதல் சிக்கல் எழுந்துள்ளது.

 

பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து சாதனைகள் படைக்க மாணவர்கள் மட்டும் அல்லாமல் ஆசிரியர்களின் பங்களிப்பும் மிகவும் அவசியம் என்று கருதுபவர் செங்கோட்டையன். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி ஏற்றது முதலே ஆசிரியர் சங்கங்களுடன் மிகவும் சுமூகமான உறவை செங்கோட்டையன் கடை பிடித்து வருகிறார். அதிலும் ஆசிரியர்கள் பணியிட மாறுதல் உள்ளிட்ட விவகாரங்களில் செங்கோட்டையன் தாராளமாக நடந்து கொள்வதாக ஒரு பேச்சு உண்டு. 

இதன் காரணமாகவே பள்ளிக் கல்வித்துறையில் செங்கோட்டையனால் புதிது புதிதாக திட்டங்களை அமல்படுத்தி அதனை வெற்றிகரமாக செயல்படுத்த முடிந்தது. அதாவது செங்கோட்டையனின் அனைத்து திட்டங்களுக்கும் ஆசிரியர்கள் முடிந்த அளவிற்கு ஒத்துழைப்பு வழங்கினர். நீட் தேர்வு பயிற்சி விவகாரத்தில் கூட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எதிர்பார்த்ததை விட அதிகம் ஒத்துழைத்தனர். 

இந்த நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்தை முன்வைத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்கிற முடிவுக்கு தமிழக அரசு கடந்த வாரம் வந்தது. அதாவது பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. முதலில் இந்த முடிவை செங்கோட்டையன் தீவிரமாக அமல்படுத்தமாட்டார்கள் என்றே கருதினார். ஆனால் கடந்த சனிக்கிழமை அன்று இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமான முடிவெடுத்தார்.

இதனை தொடர்ந்தே சனிக்கிழமை அன்று அவசர அவசரமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கே சென்று பேசினார் செங்கோட்டையன். தேர்வுகள் நெருங்கும் நேரத்தில் ஆசிரியர்களை தற்காலிகமாக நியமித்து குழப்பத்தை ஏற்படுத்தினால் மாணவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என்று எடப்பாடியிடம் கூறிவிட்டு திரும்பினார். இதனால் தான் அறிவித்தபடி திங்களன்று தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் நடைபெறவில்லை. 

ஆனால் திங்களன்றும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாத காரணத்தினால் உடனடியாக தற்காலிக ஆசிரியர் நியமனத்தை தீவிரப்படுத்த தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பரிந்துரைத்தார். ஆனால் இந்த விவகாரத்தில் அவசரம் வேண்டாம் என்று கருதிய செங்கோட்டையன் தனது ப்ரோட்ட காலை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தலைமைச் செயலாளரை அவரது அலுவலகத்திற்கே நேரில் சென்று சந்தித்து பேசினார். 

மேலும் முதற்கட்டமாக கைதாகி உள்ள ஆசிரியர்களின் பணியிடங்களுக்கு பணிக்கு வந்திருப்பவர்கள் டிரான்ஸ்பர் கேட்டால் கொடுப்போம், அவசரப்பட்டு யாரையும் வேலையில் இருந்து தூக்குவது போன்ற செயல்கள் வேண்டாம், அது தற்காலிக தீர்வாக இருக்குமே தவிர நீதிமன்றம் சென்றால் நிற்காது என்று வலியுறுத்தியுள்ளார் செங்கோட்டையன். ஆனால் தொடர்ந்து ஆசிரியர்கள் விஷயத்தில் பொறுமை காத்தால் பிரச்சனை தீராது என்று தலைமைச் செயலாளர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்று பிடிவாதம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தை விட தலைமைச் செயலகத்தில் இந்த விவகாரத்மை மையமாக வைத்து அடுத்தடுத்து அரங்கேறும் விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.