கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் சென்னை ராமபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா தனது கோர மூகத்தை காட்ட தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசியல் வாதிகள் இந்த தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் நேற்று 4,329 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,02,721ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பும் 1,385 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவிக்கு கடந்த சில சளி மற்றும் காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து, அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். அதில், அவரது ஜெயந்திக்கு கொரோன பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, சென்னை ராமபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா இல்லை என பரிசோதனையில் உறுதியானது.

ஏற்கனவே அதிமுகவில் ஸ்ரீபெரும்பத்தூர் எம்எல்ஏ பழனி மற்றும் அவரது குடும்பத்தினரும், அமைச்சர் கே.பி. அன்பழகன், உளுந்தூர்பேட்டை தொகுதி எம்எல்ஏ குமரகுரு மற்றும் அவரது மனைவி, பரமக்குடி தொகுதி எம்.எல்.ஏ. சதன் பிரபாகரனுக்கு ஆகியோருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்  தற்போது அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவிக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.