வழக்கமாக ஆளும் கட்சிதான் பண வினியோகம் செய்யும். ஆனால், அதிமுகவுக்கு பயந்து தினகரன் அணியினரும் பண வினியோகம் செய்துவருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் மே 19 இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத்  தேர்தலை வழக்கமான ‘இடைத்தேர்தல் பாணி’யில் கட்சிகள் எதிர்கொள்கின்றன. வாக்காளர்களுக்கு தாரளமாக பணம் வினியோகிக்கப்படுவதாகப் புகார் எழுந்திருக்கிறது. இந்நிலையில் ஆளுங்கட்சிக்கு போட்டியாக அமமுகவினர் பணம் கொடுப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட கோயில் சன்னதி பகுதியில் செல்லூர் ராஜூ பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “நம்மிடமிருந்து உதிர்ந்த பிரிந்தவர்கள் தொகுதியில் கறுப்பு பேன்ட், வெள்ளை சட்டை அணிந்துகொண்டு தெருத்தெருவாக உலா வருகிறார்கள். வழக்கமாக இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சிதான் பணம் கொடுக்கும்.

 
ஆனால், திருப்பரங்குன்றத்தில் வித்தியாசமாக தினகரன் அணியினர் பணத்தை விநியோகம் செய்துவருகிறார்கள். நமக்கு பயந்து அவர்களும் பணம் கொடுக்கிறார்கள். அவர்கள் சர்வசாதாரணமாக வரும் அளவுக்கு அதிமுக ஆட்சி நடைபெற்றுவருகிறது” என்று பேசி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.