திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுமைத்திறனற்ற தலைவர் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார். 

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கொடைக்கானலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்  அ.தி.மு.க.வில் வெற்றிபெற்று அதிகமான பணம் சம்பாதித்துவிட்டு தற்போது பதவி, ஆசைக்காக சம்பாதித்த பணத்தை தி.மு.க.வில் சேர்ந்து சீட் வாங்கி செந்தில்பாலாஜி செலவு செய்து வருகிறார். அவர் அரசியல் நாகரீகம் அற்றவர். அ.தி.மு.க.வால் அடையாளம் காட்டப்பட்ட அவர் தி.மு.க.வில் பதவி சுகத்துக்காக சேர்ந்தது ஒரு பச்சோந்தி என நிரூபித்துவிட்டார் என கடுமையாக சாடியுள்ளார். 

மேலும் அவர் பேசுகையில் எடப்பாடி ஆட்சியில் கொடைக்கானலுக்கு அதிகமான திட்டங்களை நிறைவேற்றபட உள்ளது. சீசன் நேரங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக நவீன கார்பார்க்கிங் வசதி அமைக்க விரைவில் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெறும். ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும். 

மூணாறு சாலையை விரைவில் திறக்கப்படும். இதற்காக விரிவான திட்ட அறிக்கையை முதல்வரிடம் கொண்டு செல்வேன் என்றார். கொடைக்கானல் கீழ்மலை விவசாயிகளின் வசதிக்காக பழச்சாறு பதப்படுத்தும் கிடங்கு அமைக்க கூட்டுறவு வேளாண்துறை சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.