வாக்கு வங்கிக்காக மக்களைப் பிரித்து வருகிறது திமுக. இதேபோல மத ரீதியாக மக்களைப் பிரித்து சிறுபான்மையினர் வாக்குகளைப் பெறும் வகையில் திமுக உள்நோக்கத்தோடு செயல்படுகிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி மதுரை கீழவாசல் தூய மரியன்னை பேராலயத்தில் சிறப்பு வழிபாடும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். “குடியுரிமைத் திருத்த சட்டம் குறித்த அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை முதல்வரும் துணை முதல்வரும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். வாக்கு வங்கிக்காக மக்களைப் பிரித்து வருகிறது திமுக. இதேபோல மத ரீதியாக மக்களைப் பிரித்து சிறுபான்மையினர் வாக்குகளைப் பெறும் வகையில் திமுக உள்நோக்கத்தோடு செயல்படுகிறது. திமுகவின் எண்ணத்தைக் கண்டிக்கும் வகையில்தான் ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டனர்.
ஜெயலலிதா சிறுபான்மை மக்களைக் காக்கும் அரணாக எப்படி செயல்பட்டாரோ, அதேபோல தற்போது முதல்வர் எடப்பாடியும் இஸ்லாமியர்களுக்குக் காப்பாளராக பாதுகாப்பு அரணாக இருந்துவருகிறார். சிறுபான்மையின மக்களுக்கு முதல்வர் செய்துவரும் நலத்திட்டங்களை கண்டு திமுகவினர் பிரமித்துபோய் இருக்கிறார்கள். தமிழகத்தில் அரசு செய்துவரும் குடிமராமத்து பணிகளை திமுக தலைவர் கவனிக்கப்போவதாகச் சொல்லியிருக்கிறார். அவர் நன்றாக கவனிக்கட்டும். அதை நாங்கள் வரவேற்கிறோம். திமுக ஆட்சியில் எந்தக் குடிமராமத்துப் பணியையும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில்தான் செய்துவருகிறோம். 
செல்லாத நோட்டான ராஜகண்ணப்பன் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். பின்னர் அதிமுகவில் செல்லாமல் ஆனவர், மீண்டும் திமுகவில் இணைகிறார். இதைக்கூட பெரிய வி‌ஷயமாக திமுக பார்க்கிறது. அதிமுக ஆட்சி மீது திமுகவால் எந்தக் குறையும் சொல்ல முடியாது. ஆனால், அதிமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் ஏதாவது இடையூறு கொடுக்க வேண்டும் என ஸ்டாலின் எண்ணுகிறார்.” என செல்லூர் ராஜூ தெரிவித்தார். பிரதமர் கையில் முதல்வர் இருந்தால் என்ன தவறு என்று பாஜக பொதுச்செயலாளர் முரளிதரராவ் பேசியது குறுத்து கருத்து தெரிவித்த செல்லூர் ராஜூ, “அதிமுக. யார் கையிலும் இல்லை. மக்கள் கையில்தான் உள்ளது.” என்று தெரிவித்தார்.