முதலமைச்சரை சீண்டும் வகையில் கருத்து தெரிவித்த அமைச்சர் ஒருவரின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் கர்தார்பூரில் உள்ள குருத்வாராவுக்கு சீக்கியர்கள் சென்று வர சாலை அமைக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான இந்த சாலையை அமைக்கும் பணிக்கு கடந்த வாரம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பாகிஸ்தானில் நடைபெற்ற விழாவில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சர் சித்து கலந்து கொண்டார். 

சித்து பாகிஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டது விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பஞ்சாப் மாநில முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங்கின் அனுமதி இன்றி சித்து பாகிஸ்தான் சென்று வந்ததாக சர்ச்சை எழுந்தது. மேலும் கேப்டன் அனுமதியின்றி எப்படி அமைச்சர் ஒருவர் பாகிஸ்தான் செல்லாம் என்றும் கேள்விகள் எழுந்தன. இதனால் சித்து மீது கேப்டன் அமரீந்தர் சிங் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது. 

இது குறித்து சித்துவிடம் செய்தியாளர்கள் கேட்ட போது தனக்கு ஒரே ஒரு கேப்டன் தான் இருப்பதாகவும் அவர் ராகுல் காந்தி என்றும் பதில் அளித்தார். அதாவது முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங்கின் பேச்சை எல்லாம் தான் கேட்கப்போவதில்லை என்பதை அமைச்சரான சித்து நேரடியாகவே கூறிவிட்டதாக தற்போது பிரச்சனை உருவாகியுள்ளது. பா.ஜ.கவில் இருந்து காங்கிரசுக்கு வந்த சித்து, முதலமைச்சர் பதவிக்கு குறி வைத்தார்.

 

ஆனால் கேப்டன் அம்ரீந்தர் சிங்கை மீறி சித்துவால் பெரிய அளவில் பஞ்சாப் மாநில காங்கிரசில் ஜொலிக்க முடியவில்லை. அமைச்சரவையிலும் கூட சுற்றுலாத்துறை எனும் டம்மியான துறையே சித்துவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தான் அம்ரீந்தர் சிங்குக்கு எதிராக சித்து செயல்படுவதாக கூறப்படுகிறது. மேலும் அம்ரீந்தர் சிங்கை தனது கேப்டன் இல்லை என்று கூறிய அமைச்சர் சித்து பஞ்சாப் மாநில காங்கிரசில் இருக்க தகுதி அற்றவர் என்று மற்றொரு அமைச்சரான ரஜீந்தர் சிங் பஜ்வா கூறியுள்ளார். 

இதே போல் அமிர்தசரஸ் தொகுதி காங்கிரஸ் எம்.பியும் கூட சித்துவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்து வருவதாகவும், சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்குவதாலும் சித்துவின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.