2011ம் ஆண்டில் முதல்வர் ஜெயலலிதா இருக்குமிடம் கோவில் என்று கூறிக் கொண்டு, ஜெயலலிதாவின் வீடு, அவர் பணியாற்றும் தலைமைச் செயலகம், சட்டசபை ஆகிய இடங்களில் செருப்பே அணியாமல் வந்தவர் அப்போதைய தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராகவும் பதவியேற்று வருபவருமான ஆர்.பி.உதயகுமார். அதிமுக மாநில மாணவரணி பொறுப்பில் இருந்த ஆர்.பி.உதயகுமார் அப்போது சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார். 

அவரை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக ஜெயலலிதா நியமித்தார். அமைச்சரானாலும், முதல்வர் ஜெயலலிதா மீதுள்ள அதீத பக்தியால், செருப்பு போடாமல் தலைமை செயலகத்திற்கு உதயகுமார் வந்து சென்றார். ’’கோவிலுக்குள் செல்லும் போது, செருப்பை கழற்றி வைத்து விட்டுத் தான் செல்கிறோம். முதல்வர் 'அம்மா' இருக்குமிடம் தான் எனக்குக் கோவில். இதனால், அவர் இருக்கும் இடத்திற்கு செருப்பு அணியாமல் சென்று வருகிறேன்’’என்று தெரிவித்தார். இதனையறிந்த முதல்வர் ஜெயலலிதா அப்போது, ‘’இனிமேல் செருப்பு அணியாமல் வரக் கூடாது’’ என செல்லமாக கடிந்து கொண்டதாக தகவல் வெளியாகின. 
   
முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் அந்த நினைவைப் போற்றும் வகையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஜெயலலிதாவுக்காக கோவில் கட்டி வருகிறார். இன்னும் சில வாரங்களில் பணிகள் முடிக்கப்பட்டு ஜெயலலிதா கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் உள்ள டி.குன்னத்தூர் அருகே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவைப் போற்றும் வகையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஜெயலலிதாவுக்காக கோவில் கட்டி வருகிறார். இந்த கோவிலில் 21 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு ஜெயலலிதாவின் பிரமாண்ட சிலையும், எம்.ஜி.ஆரின் முழு உருவ வெண்கல சிலையும் நிறுவப்படுகிறது.

பொதுமக்கள் அமரும் வகையில் மண்டபமும் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில வாரங்களில் பணிகள் முடிக்கப்பட்டு ஜெயலலிதா கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். ஜெயலலிதாவுக்கு கட்டப்பட்டு வரும் கோவில் பணிகளை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று பார்வையிட்டார். அவருடன் அவரது தந்தை போஸ், தாயார் மீனாள் மற்றும் பலர் இருந்தனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ’’மக்கள் நலனே தன் நலன் என்று மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து ஒரு தியாக தீபமாக வாழ்ந்த ஜெயலலிதா, 1½ கோடி தொண்டர்களின் குலதெய்வமாக திகழ்ந்து வருகிறார். அ.தி.மு.க. இன்னும் 100 ஆண்டுகாலம் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று ஜெயலலிதா லட்சிய முழக்கமிட்டார். அந்த லட்சிய முழக்கங்களை இன்றைக்கு நமது முதல்வரும், துணை முதல்வரும் அடிபிறழாமல் நிறைவேற்றுகின்றனர். இந்த இயக்கம் நிச்சயம் இன்னும் நூறு ஆண்டுகாலம் மக்கள் பணியாற்றும். ஏனென்றால் அம்மாவின் வாக்கு நிச்சயம் பலிக்கும்.

எங்களது குடும்பத்தாரும் குல தெய்வமாக அவரை வழிபட்டு வருகிறோம். அந்த தெய்வத்திற்கு தற்போது எங்களது குடும்பத்தார் சார்பில் கோவில் கட்டி வருகிறோம். இந்த கோவிலில் அனைத்து மக்களும் வழிபடும் வண்ணம் அதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பணி விரைவில் முடிவுற்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது’’ என அவர் தெரிவித்தார். ’அம்மா இருக்கும் இடம் கோவில்...’ என ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது சொன்னதை அவர் இறந்த பிறகு கோயில் கட்டி தனது விசுவாசத்தை காட்டி இடுக்கிறார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.