பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தமிழக டி.ஜி.பி.யிடம் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாராதி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி;- அதிமுக விட்டு பிரிந்து போனவர்கள் தற்போது இணைந்துள்ளனர். எங்களுக்குள் சகோதர சண்டை மட்டுமே நடந்துள்ளது. அ.தி.முக.வில் 1½ கோடி தொண்டர்கள் உள்ளனர். இதனால் உட்கட்சி சண்டை இருக்கத்தான் செய்யும். இனி அதிமுக மட்டுமே ஆள வேண்டும்.

வசதி வாய்ப்பில்லாதவர்கள், வயதானவர்களுக்கு சீட் கொடுக்க முடியாது. இது கம்ப்யூட்டர் காலம் என்பதால் இளைஞர்களை தேர்வு செய்து சீட்டு வழங்கப்படும் என்றார். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற அனைத்து சித்து விளையாட்டுகளும் கையாளப்படும். தேர்தல் நேரத்தில் அதிமுகவினரின் சட்டையை தொட்டால், திமுகவினரின் சட்டையை கிழிக்க வேண்டும். நம் வீட்டுக் கதவை தட்டினால் திமுகவினர் வீட்டுக் கதவை நாம் உடைத்து நொறுக்க வேண்டும். இது தொடர்பாக எந்த பிரச்சனை வந்தாலும் முழுக்க, முழுக்க உங்கள் பின்னால் உறுதுணையாக நான் இருப்பேன் என்று கலவரத்தை தூண்டும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், ஸ்ரீவில்லிப்புத்தூர் கூட்டத்தில் திமுக பற்றி அவதூறாக பேசியதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது டி.ஜி.பி.யிடம் ஆர்.எஸ்.பாராதி புகார் அளித்துள்ளார். அதில், பொறுப்புள்ள பதவியில் இருக்கும் அமைச்சர் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் அமைச்சர் பேசியதாக புகார் தெரிவித்துள்ளார்.